விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக திரைப்பட நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர்கள் தீபக், அருண் பிரசாத், விஷால், அர்னவ் மற்றும் சீரியல் நடிகைகள் ஜாக்குலின், தர்ஷா குப்தா, ஆனந்தி, பவித்ரா ஜானகி, சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷிகா, அன்ஷிதா உள்ளிட்ட முக்கிய போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசன் போல் பேச்சில் அதிக கம்பீரம் இல்லாவிட்டாலும், விஜய் சேதுபதியின் எதார்த்தமான பேச்சும், வர்ணனை இல்லாத அவரது வார்த்தைகளும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் இருந்த லிவிங் ஹால், கன்பெக்சன் ரூம், பெட்ரூம், கிச்சன் ஏரியா உள்ளிட்ட பகுதிகளை பார்வையாளர்களுக்கு காட்டி விளக்கமளித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி, எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தீர்கள், என்ன நோக்கம் என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களையும் பெற்றார்.
மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற 18 போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் கேடயம் போன்ற ஒரு பொம்மையை கையில் கொடுத்து அனுப்பினார். இதை பத்திரமாக வைத்திருந்து திரும்பி வரும்போது என்னிடம் கொடுங்கள், போட்டியாளராக நீங்கள் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றால் நான் இதற்கு உண்மையான ஷீல்டு தருகிறேன் என்றும் நம்பிக்கை அளித்து அவர்களை அனுப்பி வைத்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நடிகர் விஜய் சேதுபதியை, வெல்கம் டு மிஸ்டர் விஜய் குருநாத சேதுபதி சார் என்று பிக் பாஸ் அவரது கணீர் குரலில் அழைத்து வரவேற்றார். அப்போது, விஜய் குருநாத சேதுபதி என்று உங்களை முழுப் பெயர் சொல்லி அழைப்பதா, அல்லது சேது என்று அழைக்கலாமா என்று பிக்பாஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, என் முழுப்பெயரை சொல்லி அழைத்துக் கொண்டிருந்தால், ஷோவே முடிந்து விடும். அதனால் என்னை நீங்கள் சேது என்றே அழைக்கலாம் என்றார். அதற்கு பிக்பாஸ், ஓகே சேது சார், அப்படியே அழைக்கிறேன் என்று கூறினார். இதுவரை விஜய் சேதுபதி தான் அவரது பெயர் என ரசிகர்கள் பலரும் நினைத்திருந்த நிலையில், விஜய் குருநாத சேதுபதி என்பதுதான் விஜய் சேதுபதியின் முழுமையா பெயர் என்று நேற்று தெரியவந்து ரசிகர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.





