நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் படங்களில் பஞ்ச் டயலாக் பேசுவார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும். இப்போதும் அவரது டயலாக்குகளை பலரும், பேச்சு வார்த்தையில் கூட பயன்படுத்துவது உண்டு. ரஜினியை பார்த்துதான் பல ஜூனியர் நடிகர்களும் தங்களது படங்களில் பஞ்ச் டயலாக் பேசி வருகின்றனர்.
தனுஷ், சிம்பு போன்றவர்கள் விரல் சொடுக்கி வசனம் பேசுவதெல்லாம் தங்களது குரு நாதரான நடிகர் ரஜினிகாந்தை பார்த்துதான். இதை தான் நடிகர் விவேக், ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் சுட்டிக்காட்டி, விடலை பசங்க எல்லாம் இப்ப டயலாக் பேசறாங்கப்பா என்று கூறி, ரஜினி மாதிரியே அவர் பஞ்ச் டயலாக் பேசுவார்.
ரஜினி பேசிய வசனங்களில், கிடைக்கறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது, நான் ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி, செய்றதை தான் சொல்வேன், சொல்றதை தான் செய்வேன் போன்ற ரஜினி பேசிய டயலாக், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வசனங்களாக இருக்கின்றன.
இப்போது, ரஜினி பேசிய டயலாக்கை கிண்டலடிக்கும் விதமாக, செய்றதை சொல்வோம், சொல்றதை செய்வோமுன்னு சொன்ன ரஜினி, இந்த விஷயத்துல அப்படி எதுவும் செய்யலைன்னு சமூக வலைதளங்களில் கிண்டலடித்து கலாய்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதுவும் அவர் பேசிய செய்தி வந்த பேப்பர் கட்டிங், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, 1989ம் ஆண்டில் சென்னையில், ரஜினிகாந்த் சொந்தமாக கட்டிய ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழா நடந்துள்ளது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்த திருமண மண்டபத்தில், ஆண்டு தோறும் 25 இலவச திருமணங்களை நடத்தி வைப்பேன். இதே போன்று திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும், திருமண மண்டபங்களை கட்டி வைத்து, இலவசமாக ஏழை மக்கள் திருமணம் செய்துகொள்ள வைப்பேன் என்று, பேசி இருக்கிறார்.
அந்த செய்தி வெளியான பேப்பர் கட்டிங் படத்தை வைரலாக்கிய சிலர், சொன்னதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன் சினிமா மட்டும் தலைவர் வசனம் பேசுகிறார். ஆனால் நிஜ வாழ்வில் அவர் சொன்னதை பின்பற்றவில்லையே. 32 ஆண்டுகளாக அவரது ராகவேந்திரா மண்டபத்தில் எத்தனை இலவச திருமணங்கள் நடந்தது. அப்போது சொன்னதை இனியாவது செய்வாரா, என கேள்வி எழுப்பி, கலாய்த்து வருகின்றனர்.





