தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளை பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. அதற்கு சரியான உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன், தூத்துக்குடியை சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். எப்போதுமே மும்பை கேரளா ஆந்திரா கர்நாடகா என பிற மாநில நடிகைகள் என்றால்தான் தமிழ் சினிமாவில் மவுசு ஜாஸ்தியாக உள்ளது.
அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் என்றால் கோவை சரளா தேவதர்ஷினி போன்றவர்களை காமெடி நடிகைகளாக்கி விடுகின்றனர். அல்லது அம்மா அக்கா அண்ணி சித்தி கேரக்டர் கொடுத்து டம்மியாக்கி விடுகின்றனர். தமிழ் பேசத் தெரியாத நடிகை என்றால்தான் தமிழ் படங்களில் நடிக்க அவர்களது முதல் தகுதியாக கருதப்படுகிறது.
சன் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பிறகு டான்ஸராக சில படங்களில் முகம் காட்டினார். அதன்பிறகு சின்ன சின்ன கேரக்டரில் சில படங்களில் அவர் நடித்தார். குறிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அவருக்கு அந்த படத்தில் நல்ல அறிமுகமும் அடையாளமும் வரவேற்பும் கிடைத்தது.
தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை கனா பண்ணையாரும் பத்மினியும் தர்மதுரை வடசென்னை ரம்மி உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். பின்னர் அவர் கதாநாயகி மையப்படுத்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் அப்படி நடித்த பர்ஹானா பூமிகா திட்டம் 2 டிரைவர் ஜமுனா தி கிரேட்டஸ்ட் ஆஃப் இந்தியன் கிச்சன் தீயவர் குலை நடுங்க உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் நடித்த சங்கராந்தி வஸ்துனம் படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஓ சுகுமாரி படம் தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. பரத் தர்ஷன் இயக்கத்தில் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
இந்த படம் தனக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் நம்புகிறார். தமிழ் தெரிந்த திறமைசாலியான நடிகை, எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் வலிமையான தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷை தமிழ் சினிமா தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால்தான் தெலுங்கில் அவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.





