நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறார். ஆரம்பத்தில் குஷி, ஜோடி போன்ற சில படங்களில் துணை நடிகையாக வந்த அவர், லேசா லேசா படம் மூலம் நாயகியாக மாறினார். அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். விக்ரம் நடித்த சாமி படத்தில் மாமியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிறமொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் திரிஷா, இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இடையில் சில ஆண்டுகள் மார்க்கெட் சரிந்த நிலையில் இருந்த அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படமும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் படத்தில் வில்லியாக நடித்த கொடி படமும் திரிஷாவுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை கொண்டு வந்தது. இதில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து விஜயுடன் லியோ படத்தில் நடித்த திரிஷா விடாமுயற்சி படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்திலும் அஜீத்குமாருக்கு ஜோடியாக தொடர்ந்து நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்திலும், மலையாளத்தில் 2 படங்களிலும், மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் திரிஷா இப்போது நடித்து வருகிறார்.
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, அனிமல் படத்தை இயக்கிய பின், இப்போது பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட் என்ற படத்தை இயக்குகிறார். அதிரடி ஆக்சன் படமாக ஸ்பிரிட் படம் உருவாகிறது. இதில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒருவர் போலீஸ் அதிகாரியாகவும், ஒருவர் வில்லனாகவும் நடிக்க உள்ளனர்.
அதனால் பிரபாஸ் நடிக்கும் இரண்டு வேடங்களுக்கும் இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதில் ஒரு கேரக்டரில் நடிகை திரிஷா நடிக்கிறார். வில்லன் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கும் திரிஷாவும் இந்த படத்தில் வில்லி கேரக்டரில்தான் நடிக்க உள்ளார். ஏற்கனவே தனுஷ் நடித்த கொடி படத்தில் அரசியல்வாதி வில்லியாக நடித்திருந்தார் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.





