பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் சோனு சூட். இந்தியில் மட்டுமின்றி தெலுங்கு தமிழ் படங்களிலும் நிறைய நடித்து வருகிறார். சந்திரமுகி கேரக்டரில் வாய் பேசாத வீட்டு வேலைக்காரன் கேரக்டரில் நடித்திருப்பார். அதே போல் அருந்ததி ஒஸ்தி படங்களில் வில்லனாக அசத்தியிருப்பார். சமீபத்தில் வெளியான மதகஜ ராஜா படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
சினிமாவில் வில்லனாக நடிக்கும் சோனு சூட் நிஜத்தில் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்துவரும் ஒரு ஹீரோவாக இருக்கிறார். குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான உதவிகளை செய்தார். எளிய மக்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தானாக முன்வந்து உதவும் குணம் கொண்ட பாசக்கார மனிதராக இருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி நடிகர் சோனு சூட்டின் மனைவி மற்றும் அவரது அக்கா இருவரும் காரில் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தனர். அவர்கள் இருவரும் பயணித்த கார், திடீரென மிகப்பெரிய விபத்தில் சிக்கியது.
அவர்கள் பயணித்த கார் விபத்தால் மிகப்பெரிய அளவில் சேதமடைந்தது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த சோனு சூட்டின் மனைவி மற்றும் அவரது அக்கா மற்றும் கார் ஓட்டுனர் என மூவருமே பெரிய அளவில் பாதிப்பின்றி உயிர் பிழைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்கள் தற்போது மிகவும் நலமுடன் இருப்பதாக நடிகர் சோனு சூட் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன் என் மனைவி மற்றும் அவரது சகோதரி பயணித்த கார் மிகப்பெரிய விபத்தில் சிக்கியது. அதிலிருந்து அவர்களை காப்பாற்றியது எது தெரியுமா? அவர்கள் அணிந்திருந்த சீட் பெல்ட் தான். இத்தனைக்கும் என் மனைவி பின் சீட்டில் அமர்ந்திருந்த தனது சகோதரியிடம் சீட் பெல்ட் போடு என்று கூறியுள்ளார். அவர் சொன்னதை கேட்டு அவரும் சீட் பெல்ட் அணிந்து கொண்டார். அதற்கு பின் வந்த சில நிமிடங்களில் தான் இந்த விபத்து நடந்துள்ளது.
ஆனால் அப்படி சீட் பெல்ட் அணிந்திருந்ததால் தான் இவர்கள் இருவருமே உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பினர். நிறைய பேர் குறிப்பாக வாகன ஓட்டுனர்கள் கூட சீட் பெல்ட் என்பதை ஏதோ கடமைக்காகவும் போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக தான் அணிகிறார்கள். அப்படி இருக்கையில் பின் சீட்டில் இருப்பவர்கள் சீட் பெல்ட்டை கண்டு கொள்வதே இல்லை. ஆனால் பின் சீட்டில் அமர்ந்தவர்களும் கூட சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் உயிரை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றக் கூடியது என்று நடிகர் சோனு சூட் கூறியிருக்கிறார்.





