தமிழ் சினிமாவில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என முதலில் விமர்சிக்கப்பட்டவர் நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன், இயக்குனர் செல்வராகவன் தம்பி என்ற அடையாளங்களுடன் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் தனுஷ். ஆனால் இன்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் என்று சொல்லும் அளவுக்கு சினிமாவில் நடித்து பல சாதனைகளை செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் இதுவரை 49 படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். அந்த படத்துக்கு ராயன் என பெயரிட்டுள்ளார். இதுதவிர நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படங்களை தவிர்த்து, நடிகர் தனுஷ் தெலுங்கு பட டைரக்டர் சேகர் கம்முலா டைரக்ஷனில் குபேரா என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். அதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும், இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜாவாகவும் தனுஷ் நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2 பாகங்களாக இந்த படம் உருவாகிறது.
நடிகர் தனுஷ் நடித்த படங்களில் மிக முக்கியமான படம் ஆடுகளம். வெற்றிமாறன் இயக்கத்தில், சேவல் சண்டையை மையப்படுத்தி, மதுரை வாழ் மக்கள் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு உருவான மிக அற்புதமான படம். இந்த படத்தில் ஹீரோவாக நடித்ததற்காக நடிகர் தனுஷ் தேசிய விருது பெற்றார்.
இந்த படத்தில் தனுஷின் காதலியாக, ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிகை டாப்ஸி நடித்திருந்தார். அவருக்கு நடிகை ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்திருந்தார். அவரது நடிப்பும் படத்தில் மிக சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில், தனுஷ் தனது குருவாக மதிக்கும் பேட்டக்காரன் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என தெரிந்துக்கொள்வதே டாப்ஸிதான்.

முதலில் இந்த படத்தில் டாப்ஸிக்கு பதிலாக நடிக்க இருந்தது நடிகை திரிஷா தான். திரிஷாவும், தனுஷூம் நடிக்கும் சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த படத்தில் திரிஷா நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பின்புதான் அந்த கேரக்டரில் டாப்ஸி நடித்துள்ளார். இந்த படம் கைநழுவிய நிலையில், கொடி படத்தில் தனுஷ் உடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். எனினும் ஆடுகளம் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட திரிஷா – தனுஷ் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.






