தமிழ்நாட்டில் பெருமைக்குரிய மாண்புமிக்க பதவிகளாக முதல்வர் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பதவிகள் இருந்து வருகிறது. அதனால் தான் அந்த பதவிகளில் இருப்பவர்களை மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு அமைச்சர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களின் பெயர்களுக்கு பின்னால் அந்த மாண்புமிகு வார்த்தை மதிப்பு மிக்க மரியாதையாக சேர்க்கப்படுகிறது.
ஏனென்றால் மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக உரிமையால் அவர்கள் சட்டசபையில் முதல்வராக அமைச்சர்களாக எம்எல்ஏக்களாக பெருமைக்குரிய இடத்தில் மக்களால் அமர வைக்கப்படுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட மரியாதைக்குரிய இடத்தில் இருப்பவர்களும் அந்த மரியாதைக்குரிய வகையில் நடத்தப்பட வேண்டும்.
நேற்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பிரசார கூட்டத்தில் தவெக கட்சி தலைவர் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். அந்த தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு கேட்டு அனுமதிக்கப்பட்ட 5000 பேர் மத்தியில் அவர் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பு அந்த பகுதி தவெக நிர்வாகி ஒருவரும் பேசினார்.
அவர் பேசுகையில், ஐயா மூத்தவங்களே திமுககாரங்களே, விலையில் உசந்தது முந்திரி பதவிகளில் உசந்தது மந்திரி தமிழ்நாட்டுக்கு எங்க அண்ணன் விஜய்தான் முதல் மந்திரி என்று தாறுமாறாக பேசி பஞ்ச் டயலாக் விட்டார். இதைக்கேட்டு மேடையில் இருந்த முதல்வர் விஜய் முகம் கூட சற்று மாறிவிட்டது.
ஏனென்றால் முந்திரி மந்திரி என்று முதல்வர் மேடையில் இருக்கிற போது ஒப்பீடு செய்து பேசுவது அநாகரிகமான ஒரு செயல்தான். அவர் அப்படி பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாண்புமிகு முதல்வர் முன்பு கூட எப்படி பண்பாக பேச வேண்டும் என்பது தெரியாத தற்குறி கூட்டம் என்று நிரூபித்து விட்டனர் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வேங்கை படத்தில் நடிகர் தனுஷ், வில்லனாக உள்ள நடிகர் பிரகாஷ் ராஜிடம், என்ன விலை உசந்தது முந்திரி பதவியில் உசந்தது மந்திரின்னு பேசியிருக்கே? மளிகை கடையில் மத்த பருப்பு எல்லாம் 2 கிலோ 3 கிலோன்னு வாங்குவாங்க. ஆனா முந்திரி மட்டும் 10 கிராம் 20 கிராம் தான் வாங்குவாங்க. பாயாசத்துல போட்டாலும் அதை கொஞ்சமா தான் போடுவாங்க. முந்திரியா இருந்தாலும் மந்திரியா இருந்தாலும் அது அளவோட இருக்கணும் என்ற டயலாக் காட்சியை இணைத்து விட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





