நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்த படம் அடுத்த ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு தான் வெளியாக உள்ளது. அதற்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் தமிழக வெற்றிக் கழகம் கட்சிப் பணிகளில் தலைவர் விஜய் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தொடர்ந்து திமுகவுக்கு எதிரான தனது கண்டன குரலை விஜய் எழுப்பி வருகிறார்.
சில தினங்களுக்கு முன், சென்னை சிவானந்தா சாலையில் நடிகர் விஜய் தலைமையில் தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்புவனம், மடப்புரம் கோவில் காவலாளி அஜீத்குமார் லாக்கப் டெத் சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய், திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தனது கட்சிப் பெயரை அறிவித்து அரசியல் பிரவேசம் செய்த நடிகர் விஜய், அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தில் முதல் மாநில மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்.
காவல்துறை தரப்பில் மொத்தமாக 50 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்ட இந்த மாநாட்டில் பல லட்சம் மக்கள் திரண்டு வந்து நடிகர் விஜய்க்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த மாநாட்டில் விஜய் 48 நிமிடங்கள் இடைவிடாமல் பேசி அசத்தினார். மத்திய மாநில அரசுகளை விளாசித் தள்ளினார். அரசியல் எதிரி திமுக கொள்கை எதிரி பாஜக என்றும் இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பகிரங்கமாக அறிவித்தார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தேமுதி தலைவர் விஜயகாந்த் அரசியல் வருகையில் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் தொடர்ந்து 3 முறை சட்டபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி செய்தார். கேப்டன் விஜயகாந்த், அவர் சந்தித்த 2வது சட்டசபை தேர்தலிலேயே எதிர்கட்சித் தலைவரானார். அதே போல் நடிகர் விஜய்க்கும் மக்கள் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று அறிவித்திருக்கிறார். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த நாள் நடிகர் விஜயகாந்தின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையை சொந்த ஊராக கொண்ட நடிகர் விஜயகாந்த் பிறந்து வளர்ந்த மண்ணில், அவரது பிறந்த நாளில் நடிகர் விஜய் தனது கட்சி மாநில மாநாட்டை நடத்துவது குறிப்பிடத்தக்கது.





