தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது அவர் நடித்துவரும் 69வது படத்திற்கு ஜனநாயகன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த படத்தில் நடிகர் விஜய் இப்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைகிறது. நடிகர் விஜய் நடிக்க வேண்டிய போர்ஷன் இந்த மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது.
ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து சினிமாவுக்கு குட் பை சொல்லும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக முழு வீச்சில் வருகிற 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டம் வாரியாக தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்தித்து தன் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நடிகர் விஜய் மக்களின் குறைகளை நேரில் கேட்டறியவும் உள்ளார்.
நடிகர் விஜயை பொறுத்தவரை தமிழக அரசியலில் அவரது வருகை மிகப் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மக்கள் திலகம் எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்துக்கு பிறகு விஜய் துவங்கியுள்ள அரசியல் கட்சிக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு இருக்கிறது.
அதை விக்கிரவாண்டியில் அவர் கடந்தாண்டு நடத்திய அரசியல் மாநாட்டிலேயே திரண்டு வந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் நிரூபித்து விட்டது என்றும் பலரும் கூறுகின்றனர். மேலும் திமுக அதிமுக தவிர்த்து திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய ரத்தம் பாய்ச்சுவது போல் தமிழக அரசியலில் புது அரசியல் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற விருப்பம் பல ஆண்டுகளாகவே தமிழக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்து தனது கட்சியின் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று பிப்ரவரி 2ம் தேதி அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதலாம் ஆண்டை நிறைவு செய்து 2ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
இதையொட்டி சென்னையை அடுத்துள்ள பனையூரில் நடிகர் விஜயின் கட்சி தலைமை அலுவலகத்தில், தவெக கட்சியின் கொள்கை தலைவர்களான காமராஜர் பெரியார் வீரமங்கை வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் மற்றும் அம்பேத்கர் ஆகியோர் சிலைகள் நிறுவப்பட்டு அந்த சிலைகள் திறப்பு விழா இன்று நடந்தது. நடிகர் விஜய் தனது கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்து அந்த உருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





