விஜய் பெரிய நடிகராக உயர்ந்து கொண்டிருந்த சமயத்திலேயே, அவர் நற்பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக தளபதி மக்கள் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை விஜய் வழங்கி வந்தார். அவர் அரசியலுக்கு வருவார் என்று அப்போதே பலரும் கூறி வந்தனர்.
இதனை விஜய்யின் தந்தை ஆன எஸ்.ஏ சந்திரசேகரும் பலமுறை உறுதிப்படுத்தினார். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஏ சந்திரசேகர் விஜய் பெயரில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால் தனது தந்தையின் அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தார் விஜய்.
இப்படியான சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்ப்பாராத நேரத்தில், தனது அரசியல் கட்சிக்கான பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் குறளை மேற்கோள்காட்டி அவர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியமைப்பதே தனது இலக்கு என்று கூறியிருந்தார் விஜய்.
அரசியலின் ஆழத்தை மட்டுமல்ல நீள அகலத்தையும் பார்த்துவிட்டு தான் இறங்கி இருப்பதாகவும், தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திய விஜய், அதில் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிராக பேசி அலறவிட்டார்.
தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கும் அவர் குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் கோவையில் பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்தினார் விஜய். இதற்காக அவர் செல்லும் போது ரோட் ஷோ நடத்தப்பட்டது. இதில் சாலையின் இருமருகிலும் ஏராளமானோர் கூடி விஜயை வரவேற்றனர். தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருப்பதால் தனது அடுத்த சுற்று பயணத்திற்கும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
அதன்படி ஆகஸ்ட் மாதம் அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் இந்த பயணத்தை விஜய் ஆரம்பிக்கிறார். தொடர்ந்து டெல்டா பகுதிகளுக்கு அவர் செல்ல இருக்கிறாராம். நாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூரிலும் அவர் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





