இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்கிடையே சிபி சக்கரவர்த்தி, ஏ ஆர் முருகதாஸ், சுதா கங்கரா ஆகியோர் இயக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டுதான் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார்.
அதனால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் வெங்கட் பிரபு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதுவரை படம் இயக்காமல் இருக்க வேண்டாம் என்பதற்காக வெங்கட் பிரபு சென்னை 28 மூன்றாம் பாகம் படத்தை இயக்க தயாராகி வருவதாகவும், அதற்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது.
ஆனால் இப்போது சென்னை 28 படத்தின் 3ம் பாகம் படத்தை இயக்குவதில் பெரிய சிக்கல் நீடிப்பதால் அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு, பாடகர் எஸ் பி பி மகன் சரண் இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கமான நண்பர்கள். அவர்களது தந்தைகளை போலவே மகன்களும் சினிமாவிலும், இசையிலும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கி பழகியவர்கள்.
அதனால் வெங்கட்பிரபு முதலில் டைரக்ட் செய்த சென்னை 28 படத்தை தயாரித்தது எஸ்பி பாலசுப்ரமணியம் மகன் எஸ்பிபி சரண்தான். சென்னை 28 படத்தின் 2ம் பாகம் எடுத்த போது, அந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்த, தயாரி்பபாளர் என்ற முறையில் ரூ. 50 லட்சம் தருவதாக வெங்கட் பிரபு, எஸ்பிபி சரணிடம் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அந்த பணத்தை இதுவரை அவர் தரவே இல்லை.
அதேபோல் தனது வெற்றிக்கு காரணமானவர்கள் என்று குறிப்பிட்டு அடிக்கடி பொதுவெளியில் வெங்கட்பிரபு பேசும் போது, முதல் படத்தை தயாரித்த எஸ்பிபி சரண் பற்றி சொல்வதில்லை. எப்போதுமே வெங்கட் பிரபு, நடிகர் சிம்புவை மட்டுமே குறிப்பிட்டு சொல்கிறார். இப்படி நட்பை மறந்து, அவர்கள் உதவியதை மறந்து வெங்கட் பிரபு நடந்து கொள்வது எஸ்பிபி சரணுக்கு மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.அதனால் கடந்த சில ஆண்டுகளாக வெங்கட் பிரபு, எஸ்பிபி சரண் நட்பில் விரிசல் விழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை 28 படம் 3ம் பாகம் படம் இயக்க வேண்டும் என்றால் வெங்கட் பிரபு எஸ்பிபி சரணிடம் டைட்டில் அனுமதி வாங்க வேண்டும். ஏற்கனவே சென்னை 28 படம் இரண்டாம் பாகம் டைட்டிலுக்கு ரூ. 50 லட்சம் தராமல் ஏமாற்றிய நிலையில், இப்போது 3ம் பாகம் எடுக்க நிச்சயமாக எஸ்பிபி சரண் ஒத்துக்கொள்ள மாட்டார். மேலும் முதன்முறையாக படம் தயாரித்து சென்னை 28 படம் வெற்றிக்கு காரணமாக இருந்த எஸ்பிபி சரணை, வெங்கட்பிரபு மறந்ததும் அவருக்கு ஏகப்பட்ட கடுப்பை கிளப்பி உள்ளது. அதனால் கண்டிப்பாக வெங்கட்பிரபு, சென்னை 28 படம் 3ம் பாகம் இயக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது.





