உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா மாநிலங்களில் லியோவுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் போட்டி போட்டு டிக்கெட் வாங்கிய அவர்கள், கட்டவுட், பாலாபிஷேகம், சாலையில் பேரணி என்று கலக்கி வருகின்றனர்.
பெங்களூருவிலும் முன்பதிவு தாறுமாறாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தின் நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்க மறுத்தது. அதுமட்டுமல்லாமல் காலை 7 மணி காட்சி வேண்டுமென்றால் அரசை அணுகலாம் என்றும் அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து தயாரிப்பு குழு தரப்பு, நேற்று தமிழக அரசிடம் இது தொடர்பாக மனு அளித்தது. இது ஒரு புறம் இருக்க, தெலுங்கில் லியோ படத்தை வெளியிட இருபதாம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளத. டைட்டில் பிரச்சனை காரணமாக இந்த உத்தரவை ஹைதராபாத் நீதிமன்றம் பிறப்பித்தது. அது போக தமிழ்நாட்டில், சில முக்கியமான திரையரங்குகளில் லியோவுக்கான முன்பதிவு தொடங்கவே இல்லை.
திரையரங்குகளிடம் தயாரிப்பு நிறுவனம், ஒரு வாரத்திற்கு அதிகப்படியான வசூலை எதிர்பார்ப்பதால், இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் லியோ படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். படத்தின் முதல் பத்து நிமிடங்களை மிஸ் பண்ண வேண்டாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி இருப்பதால், ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர்.
இதனிடையே, லியோ திரைப்படத்தை அமைச்சரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான உதயநிதி பார்த்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோரை பாராட்டியுள்ளார். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், எல் சி யு என்றும் குறிப்பிட்டுள்ளார். உதயநிதியின் இந்த விமர்சனத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படம் தொடங்கியதில் இருந்தே இது எல் சி யு வில் வருமா எனக் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, தற்போது உதயநிதி பதில் அளித்து இருப்பதால் லியோவுக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.





