நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. மூன்றுவிதமான கெட்டப்புகளில் தனுஷ் நடித்துள்ளார். மிக வித்யாசமான கதைக்களத்தில், சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்ட கருவாக படம் உள்ளது.
தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசை மிகப்பெரிய சப்போர்ட்டிவ் ஆக இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி உள்ளது.
எனினும் பொங்கல் விடுமுறை காலமாக இருப்பதால், ரசிகர்கள் புதிதாக ரிலீஸ் ஆன படங்களை காண அதிக ஆர்வமும் விருப்பமும் காட்டுவர் என்பதால், கேப்டன் மில்லர் படத்துக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. தியேட்டர்களில் அதிகமான புக்கிங் நடக்கிறது. முதல் நாளில் மட்டும் ரூ. 14 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது கருத்தை எக்ஸ் பதிவில் எழுதியுள்ளார். அதில், ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமையை அடிப்படையாக கொண்ட கேப்டன் மில்லர் படம் பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் நடிப்பு அசுரன் தனுஷ் நடிப்பில் இந்த படைப்பை கொண்டு வந்த படக்குழுவுக்கு பாராட்டுக்கள், என தெரிவித்துள்ளார்.
மனித உரிமை போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலை போராட்ட களத்தின் வழியாக அழுத்தமாக பேசி இருக்கிறார் கேப்டன் மில்லர் என்றும் அந்த பதிவில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது கேப்டன் மில்லர் படத்தின் நாயகன் தனுஷ் மற்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதற்கு பதில் பதிவு செய்துள்ள நடிகர் தனுஷ், நன்றி உதயநிதி ஸ்டாலின். நீங்கள் விரும்பும் கலையை பாராட்ட தவறுவது இல்லை. கர்ணன் படத்துக்காக நீங்கள் பாராட்டிய காலத்தை நான் இன்னும் அன்புடன் நினைவில் கொள்கிறேன். இந்த பாராட்டு எனக்கும், கேப்டன் மில்லர் குழுவுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி என, தனுஷ் அதில் தெரிவித்துள்ளார்.





