சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பாட்ஷா மாஸ் ஹிட் படமாக இருந்தது. அதில் ஆட்டோ டிரைவராக அமைதியாக காணப்படும் ரஜினி, ஒரு காட்சியில் திடீரென மாணிக் பாட்ஷாவாக மாறி ஆனந்தராஜை கட்டி வைத்து அடிப்பார். அதன்பிறகுதான் அந்த படமே வேற லெவலில் மாறும். ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்று ரஜினி பேசும் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கும். அந்த காட்சியில் நடித்த ஆனந்தராஜ் அதுகுறித்து பேசியிருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது, பாட்ஷா படம் உருவான காலத்தில் எல்லாம் சோஷியல் மீடியா கிடையாது. பத்திரிகை செய்திகள் தான் வரும். அப்போது பாட்ஷா படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. 10 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்ற செய்தி வெளியானது.
சுரேஷ் கிருஷ்ணா டைரக்சனில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சத்யா மூவிஸ் தயாரிப்பு, நல்ல படம் வரட்டும் பார்ப்போம் என்று நான் நினைத்திருந்தேன். அப்போது திடீரென எனக்கு அழைப்பு வந்தது. படப்பிடிப்பு தளத்துக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை அவரது மேக்கப் அறையில் சந்தித்தேன். இந்த படத்தில் ஒரு வில்லன் கேரக்டரில் என்னிடம் நடிக்க வேண்டும் என்று ரஜினி சொன்னார்.
ரகுவரன் சரண்ராஜ் தேவன் என பெரிய வில்லன்கள் இருக்கிறார்களே, இதுல எனக்கு என்ன சார் ரோல் என்று கேட்டேன். எனக்கு சரியான பிளாட்பாரம் இல்லாமல் நான் நடிக்க விரும்புவதில்லை. அதனால் அப்படி கேட்டேன். என்னை நீங்க கட்டி வெச்சு அடிக்கணும். அந்த இந்திரன் கேரக்டர்லதான் நீங்க நடிக்கணும் என்று ரஜினி சொன்னார்.
அய்யோ ஆள விடுங்க சார், நான் கிளம்பறேன்னு எந்திரிச்சுட்டேன். அப்புறம் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, எழுத்தாளர் பாலகுமாரன் போன்றவர்களும் அங்கே இருந்தார்கள். என்னை மற்ற வில்லன்கள் அடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்களை திட்டுவார்கள். நீங்கள்தான் அதற்கு சரியான நடிகர். அதுதான் உங்களை நான் நடிக்க சொல்கிறேன் என்று ரஜினி சொன்னார்.
அவர் அப்படி சொன்னவுடன் அவர் காலை தொட்டு கும்பிட்டேன். அப்படி ஒரு நம்பிக்கையில் என்னை அவர் நடிக்க சொன்னதால் அந்த படத்தில் அந்த கேரக்டரில் நடித்தேன். ராஜாதி ராஜா படத்துக்கு பிறகு பாட்ஷா படத்தில்தான் ரஜினியுடன் மீண்டும் நடித்தேன். அதனால் அந்த வாய்ப்பை இந்திரன் கேரக்டரில் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியிருக்கிறார்.





