தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். சமீபத்தில் அவரது இசையில் தக்லைஃப் படத்தில் வெளியான முத்த மழை பாடல் பெரிய அளவில் வைரலானது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையிலும், இந்த பாடல் சூப்பர் ஹிட் பாடலாக இணையத்தில் டிரண்டிங் ஆனது. இந்த பாடல் பாடகி சின்மயிக்கு பெரிய வரவேற்பையும் பெற்றுத் தந்தது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே அய்யர்கண்டிகை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்டமான ஸ்டுடியோ இருக்கிறது. இங்கு அவர் தனது படங்களுக்கு இசையமைக்கும் பணிகளை அவ்வப்போது வந்து மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அய்யர் கண்டிகை கிராமத்தில் உள்ள தனது ஸ்டுடியோவுக்கு வந்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், திரைப்பட இசை சார்ந்த பணிகளில் பிஸியாக ஈடுபட்டு இருந்தார். அப்போது மாலை 6:30 மணி அளவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அங்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை சந்தித்தார்.
இந்த திடீர் சந்திப்பு 40 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. மாலை 6.30 மணி முதல் இரவு 7.10 மணி வரை இசைப்புயல் ஏ ஆர் ரகுமானும் மத்திய இணை அமைச்சர் முருகனும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த திடீர் சந்திப்பு குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசுக்கு நமது கலாச்சாரம் தொடர்பான சத்தியம் சிவம் சுந்தரம் எனும் வேவ்ஸ் என்ற குறும்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து கொடுத்திருக்கிறார். அதனால் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை மத்திய இணையமைச்சர் எல் முருகன் மரியாதை நிமித்தமாக நேற்று நேரில் சந்தித்து நன்றி சொன்னதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதுதான் உண்மையான காரணமா என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்படவில்லை. ஏஆர் ரகுமான் விரைவில் பாஜக கட்சியில் இணைந்து விடுவார். அதற்காக தான் பாஜக முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இணை அமைச்சர் எல் முருகன் அவரை நேரில் சந்தித்திருக்கிறார் என்று சிலர் இணையத்தில் தகவலை பரப்பி வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் ஏஆர் ரகுமான் தனக்கு அரசியல் ஈடுபாடு இல்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.





