தமிழ் சினிமாவில் இப்போது இரண்டாம் பாகம் காலகட்டம் என்பது ஒரு சீசன் போல மாறி வருகிறது. இனி வரும் பல படங்கள் இரண்டாம் பாகம் படங்களாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜெயிலர் 2, கைதி 2, டிமாண்டி காலனி 2, 7 ஜி ரெயின்போ காலனி 2, விடுதலை 2, விக்ரம் 2, வடசென்னை 2 என பல படங்கள் இரண்டாம் பாகங்களாக வெளிவருகின்றன.
தமிழ் சினிமாவி்ல 2ம் பாகமாக வெளிவந்த பல படங்கள் பிளாப் ஆகியிருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக சாமி 2, பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை சொல்லலாம். அதாவது ஒரு படத்தின் தொடர்ச்சியாக 2ம் பாகம் வெளிவரும்போது அது தோல்வியடைகிறது. அதே 2ம் பாகத்தில் வேறு கதைக்களமாக இருந்தால் படம் வெற்றி பெறுகிறது.
அதற்கு உதாரணமாக சிங்கம் 2, அரண்மனை 2, காஞ்சனா 2 போன்ற படங்களை சொல்லலாம். அது முதல் படத்தின் தொடர்ச்சியாக கூறப்பட்டாலும் கதைக்களம் வேறாக இருந்தது. அப்படிப்பட்ட படங்கள் மட்டுமே வெற்றி பெறுவது சாத்தியமாகிறது. இப்போது இயக்குனர்கள் இப்படி 2ம் பாகம் கதையை படமாக்க முன்வர காரணம், புதிய கதைகளை உருவாக்க, ஸ்கிரிப்ட் எழுத அவர்களிடம் கற்பனை வறட்சி ஏற்பட்டு விட்டது. அதனால் பழைய கதையை உருட்டி உருட்டி 2ம் பாகமாக கொண்டு வருவதாகவும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமா இயக்குனர்களில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனும் வந்துவிட்டார். புதிய பாதை படத்தில், இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் விக்ரமன். பிறகு 1990களில், புதுவசந்தம் என்ற படத்தை டைரக்ட் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
தொடர்ந்து கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பெரும்புள்ளி, வானத்தை போல, பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னை நினைத்து, சூரிய வம்சம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் விக்ரமன். கடந்த 2014ம் ஆண்டில் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த படம் நினைத்தது யாரோ. அதன்பிறகு விக்ரமன் படங்களை இயக்கவில்லை.
இந்நிலையில் விக்ரமன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் உன்னை நினைத்து. இதில் சூர்யா, சினேகா, லைலா, ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் 10 நாட்கள் வரை நடித்த நடிகர் விஜய், பிறகு கதை பிடிக்கவில்லை என விலகினார். பிறகு விஜய் கேரக்டரில் சூர்யா நடித்தார். இப்போது உன்னை நினைத்து படத்தை விக்ரமன் 2ம் பாகமாக இயக்க உள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட்டை அவர் எழுதி முடித்துள்ள நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் சந்தானம் நடிக்க இருக்கிறார் என்று விக்ரமன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.





