தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து விஜய் நடித்த தெறி மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை அட்லி இயக்கினார். இந்த 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அட்லிக்கு அமைந்தன. விஜய்க்கும் இந்த படம் மாஸ் இமேஜை சினிமா ரசிகர்கள் மத்தியில் மேலும் ஏற்படுத்தி தந்தன.
இதில் தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு சமந்தாவும் அவர் இறந்த பிறகு எமி ஜாக்சனும் ஜோடியாக நடித்திருந்தனர். மெர்சல் படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், நித்யாமேனன் இருவருமே விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தனர். அதே போல் பிகில் படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த 3 படங்களிலும் நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் கேரக்டர்களாகவே இருந்தன.
இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கு ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். இதில் நாயகியாக நயன்தாரா நடித்தார். மேலும் தீபிகா படுகோன் பிரியாமணி விஜய் சேதுபதி யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரூ. 1150 கோடி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லி இயக்கும் 6வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வீடியோ வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கிறார். புஷ்பா புஷ்பா 2 படங்களில் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது 22வது படமாக இது உருவாகிறது.
இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த படத்தின் கதாநாயகி யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. விஜய் நடித்த தமிழன் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான் இந்த படத்தின் நாயகி என ஆரம்பத்தில் ஒரு தகவல் பரவியது.
ஆனால் இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் அட்லி இயக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்த போதுதான் அதில் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது குறித்து பேசபட்டதாகவும், அல்லு அர்ஜூன் நடிக்கும் இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க அட்லி பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில், அட்லி இயக்கிய தெறி படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்த நடிகை சமந்தா தான் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.





