நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் கருப்பு படத்தின் டீசர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டீசர் காட்சியை பார்த்த ரசிகர்கள், நடிகர் சூர்யாவுக்கு நிச்சயமாக இந்த படம் சூப்பர் கம்பேக் படமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், இன்னும் டிஜிட்டல் வியாபாரம் ஆகாததால் ஒருவேளை இந்த படம் 2026ம் ஆண்டில் தான் ரிலீஸ் ஆகும் என்றும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கருப்பு படம் பற்றியே ஏற்கனவே நிறைய யூகங்கள் எழுந்து வந்தன. இந்த படம் சாமி கதையா, இல்லை சாதாரண கதையா என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
மேலும் கருப்பு படத்தின் கதையை முதலில் படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி நடிகர் விஜயிடம் சொன்னதாகவும் அவர், கதை ரொம்ப பிடித்து இருக்கிறது. ஆனால் இந்த கேரக்டரில் நான் நடித்தால் அது சரியாக வராது என்று மறுத்ததாகவும் அப்போது தகவல் வெளியானது. தற்போது இந்த கதை சூர்யாவை கதாநாயகனாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இது நடிகர் விஜய்க்கு சொல்லப்பட்ட கதை அல்ல; அவரிடம் சொன்ன கதையை படமாக்கவில்லை. நடிகை நயன்தாராவுக்காக எழுதப்பட்ட கதைதான் இது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் கதாநாயகிக்காக எழுதிய ஒரு கதையில் ஹீரோவாக சூர்யா எப்படி நடிக்க முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. இங்கேதான் தனது ஒட்டுமொத்த திறமையையும் இயக்குனராக ஆர்கே பாலாஜி பயன்படுத்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அதாவது மூக்குத்தி அம்மன் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசாக பூமியில் பிறந்து அநியாயத்தை தட்டிக் கேட்டால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை. ஒரு சில காரணங்கள் மூக்குத்தி அம்மன் 2 படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்க முடியாமல் போய்விட்டது. இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குனர் சுந்தர் சி டைரக்ட் செய்து வருகிறார். அந்த படத்தில் நயன்தாராதான் மீண்டும் அம்மனாக நடிக்கிறார். அதனால் மூக்குத்தி அம்மன் 2 கதையை 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கருப்பசாமி, தற்போது மனிதராகப் பிறந்து வக்கீலாக வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று கதையை மாற்றி ஆர்ஜே பாலாஜி கருப்பு படத்தை உருவாக்கி இருக்கிறார்.
கருப்பு மற்றும் வக்கீல் கேரக்டரில் சூர்யா நடித்திருந்தாலும், அவர் இரட்டை கேரக்டரில் நடிக்கிறாரோ என்ற சந்தேகம் முதலில் ரசிகர்களுக்கு வந்தது. ஆனால் கருப்பு சாமி மற்றும் வக்கீல் கேரக்டர் என 2 கெட்அப்களில் பட்டி டிங்கரிங் பார்த்து சூர்யாவுக்கு ஏற்ப இயக்குனர் மாற்றி இருக்கிறார். ஒரு இயக்குனராக ஆர்ஜே பாலாஜி இதுவரை தோற்றது இல்லை என்பதால் சூர்யா ரசிகர்களுக்கு அவர் மீது அலாதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.





