தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து தனக்கென ஒரு வரலாறு படைத்தவர். 1980களில் தொடர்ந்து இன்று வரை கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் என்றென்றும் கொண்டாடப்படும் வைர வரிகளாக தான் இருக்கின்றன. அதிலும் 1980 90களில் அவர் எழுதிய காதல் பாடல்கள் தேன் சொட்டும் பலாச்சுளைகளாக இசை ரசிகர்களுக்கு தித்திக்கின்றன.
கவிஞர் வைரமுத்து இசையமைப்பாளர் இளையராஜா நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் சொந்த வாழ்க்கையில் பல விமர்சனங்களை சர்ச்சைகளாக சந்தித்தவர்களாக இருந்தாலும், கலை வாழ்வில் அவர்கள் தந்த பங்களிப்பும் அர்ப்பணிப்பும் எந்த கலைஞனும் நெருங்க இயலாத தொட்டு பார்க்க முடியாத சாதனைகளின் உச்சங்கள் என்றால் அது மிகையல்ல.
சிலருக்கு விருதுகளால் பெருமை. ஆனால் விருதுகளுக்கே பெருமை சேர்க்கும் வித்தகர்களாக தான் வைரமுத்து இளையராஜா கமல்ஹாசன் போன்ற கலைஞர்கள் இருக்கின்றனர். எவ்வளவு திறமை உழைப்பு பெருமை இருந்தாலும் ஒருவரது அந்தரங்கம் பற்றி இழிவாக பேசும் சமூகம் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டது இவர்களது சொந்த வாழ்க்கையில் உண்மையாகி விட்டது.
கவிஞர் வைரமுத்துவுக்கு ரஜினி கமல் போன்றவர்கள் நெருங்கிய நண்பர்கள். எப்போது விரும்பினாலும் அவர்களை நேரில்சந்திக்கும் வாய்ப்பும் அழைப்பும் அவருக்கு இருக்கிறது. நேற்று ராஜ்ய சபா எம்பி நடிகர் கமல்ஹாசனை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் வைரமுத்து கூறியிருக்கிறார்.
அதில் வைரமுத்து கூறியதாவது, நாளாயிற்று. நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன். நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார். அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.
செயற்கை நுண்ணறிவில் உங்களுக்குப் பயிற்சி உண்டா என்றார். செயற்கை நுண்ணறிவைக் கவிதைக்குப் பயன்படுத்தினேன்; ஆனால் அதில் ஜீவன் இல்லை என்றேன். அடுத்த படத்திற்கான தலைப்பைச் சொன்னார். நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள் என்றேன். டெல்லிப் பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்துகொண்டேன். மகிழ்ந்து விடை கொண்டேன் என்று கவிஞர் வைரமுத்து அதில் கூறியிருக்கிறார்.





