கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பாடல் ஆசிரியராக வலம் வருபவர். மிகப்பெரிய கவிஞராக போற்றப்படுபவர். இதுவரை சிறந்த பாடல் எழுதிய கவிஞராக ஆறு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். அவரது மகன்கள் கபிலன், மதன் கார்க்கி இருவருமே பாடல் ஆசிரியர்களாக இருக்கின்றனர்.
சினிமாவில் பாடல் எழுதுவது மட்டுமின்றி ஒரு எழுத்தாளராக பல சிறந்த படைப்புகளை தந்தவர் வைரமுத்து. கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், 3ம் உலகப் போர், தண்ணீர் தேசம், மீண்டும் என் தொட்டிலுக்கு, வில்லோடு வா நிலவே, என் ஜன்னலுக்கு வெளியே என பல நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.
திமுகவின் அபிமானியான வைரமுத்து கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களுடன் அதிக நெருக்கம் கொண்டவர். ரஜினி, கமல் இருவரின் பிரியத்துக்குரிய நண்பர். தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த கவிஞராக அவர் எழுதிய பாடல்கள் பலவும் இன்று மட்டுமல்ல, காலம் கடந்தும் ஒலிக்கும் சிறந்த படைப்புகளாக, பாடல்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.
இப்போது மிக்ஜம் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கிறது. பல இடங்களில் வீடுகளை சுற்றிலும் மழைவெள்ளம் தேங்கியுள்ள நிலையில், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கார்த்தி, சூர்யா இருவரும் முதல்கட்டமாக ரூ. 10 லட்சமாக நிவாரண நிதி வழங்கியுள்ளனர். பார்த்திபன், நயன்தாரா, விஜய், அஜீத் ரசிகர்கள் என பலரும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். உணவு பொட்டலங்களை, வழங்கி வருகின்றனர். வளர்ந்து வரும் நடிகர் கேபிஒய் பாலா, தனது சொந்த பணத்தை ரூ. 5 லட்சம் வரை மக்களுக்காக தந்துள்ளார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கியதாக கூறி, சக மனிதனின் துயரம், நம் துயரம் என கவிதையும் எழுதியிருக்கிறார். ஒரு பாடல் எழுத லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர் வைரமுத்து.மழையால் 4 ஆயிரம் கோடி வரை சேதாரம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறிவரும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் என்பது யானை பசிக்கு சோளப்பொரி அளவு கூட இல்லை. நானும் நிதி கொடுத்தேன் என சொல்லிக்கொள்ள இந்த ஒரு லட்சம் ரூபாய் தந்தாரா, ரூ. 10 லட்சம் தரக்கூட இவ்வளவு பெரிய கவிஞருக்கு மனம் வரவில்லையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நிதி தந்தும் அதை மிக குறைவாக தந்து விமர்சனத்தில் சிக்கி இருக்கிறார் வைரமுத்து.





