தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞராக இருப்பவர் வைரமுத்து. கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலகப்போர் தண்ணீர் தேசம் என பல நூல்களையும் எழுதியிருக்கிறார். இதுவரை சிறந்த பாடல் ஆசிரியர் என 6 முறை தேசிய விருதும் பெற்றவர். சிறந்த இலக்கியவாதி என்பதற்காக சமீபத்தில் ஞானபீடம் விருதும் அறிவிக்கப்பட்டவர்.
திமுக ஆதரவாளராக இருந்து வரும் கவிஞர் வைரமுத்து மீது தனிப்பட்ட விமர்சனங்கள் சர்ச்சைகள் நிறைய இருந்தாலும் ஒரு கவிஞராக பாடல் ஆசிரியராக எழுத்தாளராக இலக்கிய தளத்தில் கொண்டாடப்படும் ஒரு படைப்பாளியாக வைரமுத்து திகழ்கிறார். அதனால் விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் ஒரு இலக்கியவாதியாக தான் அவர் பார்க்கப்படுகிறார்.
மத்திய அரசின் தொகுதி மறு வரையறை குறித்து இன்று கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, நாடாளுமன்றத் தொகுதிகளின் மறு வரையறை குறித்து இந்திய இறையாண்மையைப் போலவே அறிவுலகமும் அச்சப்படுகிறது. இந்தியா தெற்கு என்ற திசையைக் கழித்துவிட்டு மூன்று திசைகளோடு இயங்க முடிவு கட்டியிருப்பதாய்த் தோற்றம் தருகிறது.
இந்த மறுவரையறை மக்கள் தொகையை முன்னிறுத்துகிறதா மாநில நலன்களை முன்னிறுத்துகிறதா என்ற கேள்விகளோடு விவாதிக்கப்பட வேண்டும். வட இந்தியாவை விடத் தென்னிந்தியாவின் உறுப்பினர் எண்ணிக்கை குறைவது இந்தியா தன் உறுப்பையே குறைத்துக்கொள்வது போன்றதாகும்.
விந்திய மலைக்குத் தெற்கே உள்ளது விந்தியா என்றும், வடக்கே உள்ளதே இந்தியா என்றும் ஒரு பூகோளப் புரட்சி நடப்பதற்கு இந்தப் புது மசோதா வழிவகுக்கும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையெனில் இருக்கும் தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்கலாமே!
அல்லது அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு இடமளிக்கலாமே. நாடு கடினமான பல கேள்விகளைக் கடக்கவேண்டி இருக்கிறது. பெரியவர்களே சிந்தியுங்கள். தூபிகளில் உள்ள சிங்கங்கள் தென்னிந்தியர்களைத் தின்றுவிடக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து தனது இந்தப் பதிவில் கூறியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





