கோவையில் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் பல வீடியோக்களை கருத்துகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியவுடன் அந்த கட்சியில் வைஷ்ணவி உறுப்பினராக சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியிலிருந்து திடீரென வெளியேறிய வைஷ்ணவி, திமுகவில் இணைந்தார். இதுகுறித்த பலவிதமான விமர்சனங்கள் கேள்விகள் எழுந்தன. கோவையில் நடந்த தவெக கூட்டங்களில் வைஷ்ணவிக்கு முக்கியத்துவம் தராத நிலையில் அவர் கட்சியை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்ததாகவும் ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில்திமுகவில் சேர்ந்தவுடன் வைஷ்ணவி தமிழக வெற்றிக்கழகம் பற்றியும் நடிகர் விஜய் பற்றியும் தாறுமாறாக பேசினார். அது மட்டும் இன்றி சோசியல் மீடியாவில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளை நிபந்தனைகளை விதித்ததால்தான் தவெக கட்சியில் இருந்து விலகி விட்டேன் என்றும் வைஷ்ணவி கூறியிருந்தார்.
மேலும் தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் கட்சி தொண்டர்களான விர்ச்சுவல் வாரியர்ஸ் மீதும் கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் இப்போது வைஷ்ணவி புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் தவெக கட்சியில் இருந்து வெளியேறிய முதல், என்னை பற்றி சோசியல் மீடியாவில் தவறாகவும் ஆபாசமாகவும் அவதூறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக மீம்ஸ்களை பதிவிட்டு முகம் சுளிக்கும் வகையில் செய்கிறார்கள். இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் வாயை திறந்தோ, கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையோ கொடுக்கவில்லை. இனிமேலும் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. அதனால் தான் நான் புகார் அளித்திருக்கிறேன்.
அதோடு அநாகரிமான அரசியலை எவ்வாறு செய்யலாம் என்பதை தமிழக வெற்றி கழகத்திடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் கருத்தியல் ரீதியான கேள்விகளை தவெக விடம் முன்வைத்தாலும் கூட அவதூறான கருத்துக்களை தான் சொல்கிறார்கள் என்று அந்த மனுவில் வைஷ்ணவி கூறியிருக்கிறார். தவெக தலைவர் விஜய் மீது இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி போலீசில் புகார் அளித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





