நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக அஜித்குமார் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
இது அஜீத்குமார் ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியது. ஏனெனில் விஜய் நடித்த லியோ, தி கோட் என 2 படங்கள் 2 ஆண்டுகளிலும் வெளியாகின.
விடாமுயற்சி குட் பேட் அக்லி என 2 படங்களில் அஜீத்குமார் நடித்து முடித்த நிலையில் விடா முயற்சி படம் வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்கும், மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று குட் பேட் அக்லி படமும் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதிலும் மே 1ம் தேதி அஜீத்குமாரின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருப்பதாக கூறப்பட்டது. கடந்த வாரத்தில் வெளிநாட்டில் அந்த பாடல் காட்சியும் படம்பிடிக்கப்பட்டது. அதில் அஜித்குமார் திரிஷா நடித்த காட்சிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆனால் இன்னும் விடாமுயற்சி படம் தணிக்கை குழு பார்வைக்கு போகவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடாமுயற்சி படம் தணிக்கைக்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் இன்னும் படம் ஃபர்ஸ்ட் காபி ரெடி ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி விடாமுயற்சி படம் 99 சதவீதம் பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி அஜீத்குமார் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இதுகுறித்து சினிமா மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், வருகிற பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஏனெனில் லைகா நிறுவனம் பலத்த நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லைகா தலைமை நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 90 சதவீத பணியாளர்களை பணியை விட்டு வெளியேற்றி உள்ளது. இது பெரிய பரபரப்பை யுகேவில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் விடாமுயற்சி படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் வெளியிட்டாலும் ப்ரீ டிஸ்ட்ரிபியூசன் முறையில் உடனே வருவாய் கிடைக்காது. ஓவர்சீஸில் லைகாவே படத்தை வெளியிடுகிறது. உடனடி தேவைக்கு வருவாய் இல்லை. விடாமுயற்சி படம் இன்னும் ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகாத நிலையில், இந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. அதனால் விடாமுயற்சி படம் வராத நிலையில் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் ரெடியாக உள்ளது. அது ரிலீஸாக அதிக வாய்ப்புள்ளது என்று பிஸ்மி கூறியிருக்கிறார். இது அஜித்குமார் ரசிகர்களை பலத்த ஏமாற்றமடையச் செய்துள்ளது.





