இயக்குனர் வெங்கட்பிரபு, கங்கை அமரனின் மூத்த மகன். துவக்கத்தில் உன்னை சரணடைந்தேன், ஏப்ரல் மாதத்தில், சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்த வெங்கட்பிரபு, ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறினார். சென்னை 28 என்ற படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி, இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு கிடைத்தது. அதன்பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, இப்போது நடிகர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் ட்ரெயிலர் வருகிற 15ம் தேதி அல்லது, கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தி கோட் படத்தை பார்த்த விஜய், படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி அர்ச்சனா ஆகியோர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. குறிப்பாக நடிகர் பிரசாந்த் இந்த படத்தில் நடித்துள்ளார். மைக் மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். சினேகா, மீனாட்சி சௌத்ரி, ரம்யா கிருஷ்ணன், லைலா, சுதீப், கஞ்சா கருப்பு, அஜ்மல், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தி கோட் படத்தில், அஜீத்குமார் நடிப்பதாக இருந்த ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது. பல மாதங்களுக்கு முன் இயக்குனர் பிரவீன் காந்தி. பிரசாந்தின் தந்தை தியாகராஜனிடம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது நடிகர் பிரசாந்த், விஜய் மற்றும் அஜீத்குமார் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய கூட்டணி படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் அதற்கு பிறகு அந்த கேரக்டரில் அஜீத்குமார் நடிக்காத நிலையில், இப்போது தி கோட் படத்தில் பிரபுதேவா நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அஜீத்குமாரை தி கோட் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு கடுமையாக முயற்சித்திருப்பார் என்றும் அஜீத் குமார் தரப்பில் இருந்து எந்தவிதமான சிக்னலும் பதிலும் இல்லாததால் இறுதியில் அந்த கேரக்டரில் பிரபுதேவாவை நடிக்க வைத்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.





