ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு, சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சென்னை மாநகரில் வசிக்கும் இளைஞர்களை மையமாக வைத்து, அவர்களுக்குள் இருக்கும் காதல் நட்பு பாசம் பிரிவு என அனைத்தையும் ஒரு சேர கலந்து தனது படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் வெங்கட் பிரபு.
சுவாரஸ்யமும் யதார்த்தமும் ஒருசேர எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இங்கிருந்து தான் வெங்கட் பிரபுவின் திரையுலக பயணம் ஆரம்பித்தது என்றே கூறலாம். இதன் பிறகு சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக அவர் எடுத்த சரோஜா திரைப்படமும் வெற்றி பெற வெங்கட் பிரபு பிரகாசிக்க ஆரம்பித்தார்.
வெங்கட் பிரபு ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்றால் அது நிச்சயம் கலகலப்பாக இருக்கும், சோகமான முடிவு இருக்காது என்ற கருத்தை பலரும் முன்வைக்க அஜித் குமாரை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தார் இயக்குனர்.
இப்போது வரை அஜித்குமாருக்கு பெயர் சொல்லும் திரைப்படங்களில் முதலாவது இடத்தை மங்காத்தா தான் பிடிக்கும். அந்த அளவுக்கு அந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து மாஸ், கார்த்தியை வைத்து பிரியாணி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தை கொடுத்து மீண்டும் சிக்ஸர் அடித்தார்.
தொடர்ந்து மாநாடு படத்தை இயக்கி மீண்டும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு, மன்மத லீலை கஸ்டடி என அடுத்தடுத்த திரைப்படங்கள் தோல்வியடைந்தன. தற்போது விஜய்யை வைத்து அவர் கோட் படத்தை இயக்கியிருக்கிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இந்த திரைப்படம் வெளியாகிறது.
இன்னும் படம் ரிலீஸ் ஆவதற்கு மூன்று நாட்களே இருக்கும் சூழலில் அதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பது நம் அனைவருக்கும் தெரியும். கொரோனா காலத்தில் இதற்கான கதையை எழுத ஆரம்பித்ததாக வெங்கட் பிரபு கூறி இருக்கிறார். முதலில் தந்தை கதாபாத்திரத்திற்கு ரஜினியையும், மகன் கதாபாத்திரத்திற்கு தனுஷையும் மனதில் வைத்து இந்த கதையை எழுதியதாக அவர் தெரிவித்துள்ளார்.





