வாரிசு மற்றும் லியோ திரைப்படங்களை தொடர்ந்து விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். படக்குழு அதனை சுருக்கி கோட் என்று அழைக்கிறது. அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு என பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த வெங்கட் பிரபு தான் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இதில், பிரபுதேவா பிரசாந்த் சினேகா மீனாட்சி சௌத்ரி மைக் மோகன் லைலா அஜ்மல் வைபவ் வி டிவி கணேஷ் யோகி பாபு பிரேம்ஜி அமரன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் மைக் மோகன் வில்லனாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
படத்தின் டிரைலர் பெரிய வரவேற்பு பெற்றாலும் பாடல்கள் அந்தளவு சிறப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். யுவன் சங்கர் ராஜா அந்த அளவுக்கு இருப்புடன் பாடல்களை கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இருப்பினும் படத்தின் டிரைலர் அவர்களை திருப்தி அடைய செய்திருக்கிறது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அதில் இடம் பெற்றிருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்தை டி ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னும் திரைப்படம் வெளியாக நான்கு நாட்களே இருக்கும் சூழலில் அதற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு கோட் திரைப்படம் திரையிடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் இந்த திரைப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் படம் குறித்த புதிய தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருக்கிறார். முதலில் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் இணைக்கும் திரைப்படத்தை தான் நாங்கள் தயாரிக்க இருந்தோம். வாரிசு படத்தின் சூட்டிங் செல்லும் போது, விஜயிடம் வெங்கட் பிரபு தனது படம் தொடர்பான கதையை கூறியிருக்கிறார். இது அவருக்கும் பிடித்துப் போனதால், இயக்குனர் எங்களிடம் தெரிவிக்க இந்தத் திட்டத்தை நாங்கள் கையில் எடுத்தோம் என்று தெரிவித்துள்ளார்.





