சூர்யா தற்போது கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேட்ச் ஒர்க் பணிகளும் மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், அது நடக்காமல் போனது. அதேசமயம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் சுந்தர் சி வசம் சென்றது. இதனைத் தொடர்ந்து த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் எனும் திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டு இருந்தார் ஆர் ஜே பாலாஜி.
இது ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக எடுக்கப்பட இருந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இதனை படமாக்க திட்டமிட்டு இருந்தார்கள். அந்த சமயத்தில் திடீரென கதைக்களம் மாற, சூர்யாவை வைத்து இதே திரைப்படத்தை எடுக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த திரைப்படம்தான் கருப்புவாக உருவாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
இருப்பினும் இந்த திரைப்படத்திலும் திரிஷா இருக்கிறார். அவருக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் நட்டி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். லப்பர் பந்து சுவாசிகாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து வாடிவாசலில்தான் சூர்யா நடிப்பார் என்று அவரது ரசிகர்களே எதிர்பார்த்தார்கள்.
ஆனால் திடீர் திருப்பமாக, சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார். இதன் படபூஜை நிகழ்ச்சி அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகிறது. இதில் சூர்யாவுக்கு கதாநாயகியாக மமீதா பைஜூ நடிக்கிறார். ராதிகா ரவீனா டாண்டன் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சூரியாவுடனான திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை வெங்கி பகிர்ந்து இருக்கிறார். அதில், சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாறையே நாங்கள் சூர்யாவை வைத்து படமாக எடுக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதன் உரிமம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. சூர்யாவும் ஏற்கனவே சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் என இரண்டு பயோபிக் திரைப்படத்தில் நடித்து விட்டார். இதனால் முழுக்க முழுக்க ஒரு குடும்ப கதையை அவரை வைத்து எடுக்க இருக்கிறேன். இதன் முழு கதையையும் கேட்டுவிட்டு சூர்யா மகிழ்ச்சி அடைந்தார். தற்போது அதனைத் தான் எடுத்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.





