சென்னை மாநகராட்சி முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி. அவரது மகன் வெற்றி துரைசாமி, சமீபத்தில் சிம்லா சென்றுவிட்டு காரில் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில், சட்ஜஸ் நதியில் விழுந்து அவர் உயிரிழந்தார். எட்டு நாட்களுக்கு பின் அவரது உடல் மீட்கப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டது. அவர் நடிகர் அஜீத்குமாரின் நெருங்கிய நண்பர். அதனால் வெற்றியின் இறுதி அஞ்சலியில் சோகத்துடன் அஜீத் கலந்துக்கொண்டார்.
மறைந்த வெற்றி துரைசாமி, என்றாவது ஒருநாள் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அத்துடன் இயக்குநர் வெற்றிமாறனுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இருவரும் இணைந்து ஐஐஎப்சி என்ற கல்வி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அவரது மறைவால் அதிர்ச்சியடைந்த வெற்றிமாறன், தனது நண்பருக்காக இரங்கல் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
அப்போது வெற்றி துரைசாமி மறைவு குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, வெற்றி துரைசாமி, என்னிடம் இருந்து சினிமா கற்றுக்கொண்டதாக அடிக்கடி சொல்வார். ஆனால் உண்மையில் அவர்தான் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார். எனக்கும் அவருக்கும் இருந்த பொதுவான குணங்கள் என்பது பறவைகள், விலங்குகளை நேசிப்பதாக தான் இருந்தது.
நிறைய தேடல்கள் அவரிடம் இருந்தது. சிறந்த புகைப்பட கலைஞர். அதற்கான விருதுகளை நிறைய பெற்றிருக்கிறார். கடந்தாண்டு கொரில்லாக்களை புகைப்படம் எடுக்க ஆப்பிரிக்கா சென்று வந்தார். இந்த ஆண்டு பனிச்சிறுத்தைகளை புகைப்படம் எடுக்கச் சென்று விபத்தில் உயிரிழந்து விட்டார். பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் அவரது பங்களிப்பு, என் பணிகளில் ஏதேனும் ஒரு விதத்தில் இருந்தது. பறவைகள், மாடுகள், இசைக்கருவிகள் என நான் விரும்பியதை எல்லாம் அவரே முன்வந்து வாங்கி கொடுத்திருக்கிறார். இப்படி நிறைய விஷயங்களில் அவரது பங்களிப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது.
நான் ஐஎப்சிசி துவங்க நினைத்த போது அதற்கு இடம் கொடுத்து நிறைய உதவிகளை செய்தார். அவரது உதவி இல்லாவிட்டால், ஐஎப்சிசி துவங்கும் என் கனவு நிறைவேற இன்னும் நீண்டகாலம் ஆகியிருக்கும். அவரது மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மனிதர்களில் நிறைய பேரை சந்தித்தாலும், சிலரது மறைவு நம்மில் கொஞ்சத்தை எடுத்துச் சென்று விடுகிறது. அப்படிப்பட்ட மறைவாக வெற்றி துரைசாமியை இழந்திருக்கறேன், என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.





