சமீபத்தில், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இது நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால், 20 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்த வகையில், இது ஒரு சிறப்பு விழாவாக கொண்டாடப்பட்டது. கார்த்தி படங்களை இயக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், உடன் நடித்த நடிகர், நடிகையர் என பலரும் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர்.
ஆனால் கார்த்தி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானதே, இயக்குநர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில்தான். ஆனால், இந்த விழாவுக்கு அவர் அழைக்கப்படவில்லை. இதுகுறித்து ஒரு நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்ட போது, என்னை முறையாக அழைக்கவில்லை. அதுமட்டுமின்றி பருத்திவீரன் தயாரிப்பு குறித்து கோர்ட்டில் 17 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது என்ற தகவலையும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் நான்தான் என்று நேர்காணல் ஒன்றில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் குறித்து மிக தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த அமீர், பருத்திவீரன் படம் எடுக்கும்போது என்னுடன் இருந்த நண்பர்களுக்கு உண்மை தெரியும் என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பருத்திவீரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு பெரிய தொகையை அமீர் அண்ணனுக்கு நான் கடனாக கொடுத்தேன் என, நடிகர் சசிக்குமார் பதிவிட்டார். நண்பர்கள், உறவினர்கள் என 50, 60 பேரிடம் கடன் வாங்கிதான் படத்தை அமீர் எடுத்து முடித்தார். அவர்களிடம் சென்று பணத்தை வாங்கி வந்து கொடுத்தவனே நான்தான் என இயக்குநர் சமுத்திரக்கனியும் பதிவிட தொடர்ந்து பொன்வண்ணன், கவிஞர் சிநேகன், இப்போது கரு பழனியப்பன் என பலரும் அமீருக்கு ஆதரவளித்துள்ளனர்.
இந்த பிரச்னையில் பலரும் கோபப்பட்டது சூர்யா மற்றும் கார்த்தி மீதுதான். இதில் சமுத்திரக்கனி தனது பதிவில், கார்த்தி மவுனமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தை கூறியிருந்தார். ஏனெனில், பருத்திவீரன் படத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் கார்த்திக்கு எந்த அடையாளமும் தமிழ் சினிமாவில் துவக்கத்தில் கிடைத்திருக்காது என்ற நிலையில், அவர் நன்றி மறந்தாரா என பலரும் விமர்சித்தனர்.
இதற்கிடையே வாடிவாசல் படத்தில், மிக முக்கிய ரோலில் அமீர் நடிக்க ஏற்கனவே பேசப்பட்ட நிலையில், இந்த பிரச்னையில் அவர் நடிப்பாரா, சூர்யா அமீருடன் இணைந்து நடிப்பாரா என பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று திடீரென இயக்குநர் வெற்றிமாறன், அமீரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இருவரும் வாடிவாசல் படம் குறித்து பேசிய நிலையில், அமீர் வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் நடிப்பது மிக உறுதி என தெளிவாகியுள்ளது. ஏற்கனவே வடசென்னை படத்தில், அமீருக்கு லீடிங் ரோல் கொடுத்தவர் வெற்றிமாறன் என்பதும் குறிப்பிடத்தக்கது.





