தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இப்போது மூக்குத்தி அம்மன் 2 படம் அவரது நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு நடிக்கும் ஒரு படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க முன்வந்தார். இதற்காக பல கோடி ரூபாய் சிம்புவுக்கு அட்வான்ஸ் ஆக அவர் கொடுத்துள்ளார்.
ஆனால் ஒத்துக்கொண்டபடி ஐசரி கணேஷ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்கவில்லை. வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சிம்பு திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிய பஞ்சாயத்தாக மாறியது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையும் நடந்து வந்தது.
இதற்கிடையே சிம்பு தரப்பில் இருந்து ஐசரி கணேஷிடம் சமாதானம் பேசினர். வழக்கை வாபஸ் பெற்று விடுங்கள். தேதி தருகிறேன் என்று சிம்பு தரப்பில் கூறிய நிலையில், ஐசரி கணேஷ் தனது வழக்கை வாபஸ் பெற்றார். ஆனால் அதற்கு பின்பு சொன்னபடி சிம்பு ஐசரி கணேஷூக்கு அவரது நிறுவனம் தயாரிப்பில் நடிக்க தேதியும் தரவில்லை. இதுவரை வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகிறார். நிச்சயமாக இது சிம்பு நடிக்கும் படங்கள் எதுவும் திரைக்கு வரும்போது பெரிய விவகாரமாக வெடிக்கும். கோர்ட்டில் மீண்டும் அவர் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது என்பதால் இப்போது தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படம் அதில் வசமாக மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.
அதனால் அரசன் படத்தின் தயாரிப்பாளர் தாணு இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷை சமீபத்தில் நேரில் சந்தித்து சமாதானம் பேசியுள்ளனர். எப்படியாவது சிம்பு தர வேண்டிய பணத்தை பேசி சுமூகமாக இந்த பிரச்னையை முடித்து வைக்கிறோம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் இதற்கு ஐசரி கணேஷ் சம்மதிக்கவில்லை.
சிம்பு வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது கால்ஷீட் தருகிறேன் என்று அவர் சொன்னதை நம்பி வழக்கை வாபஸ் வாங்கினேன். அதிலும் அவர் மோசடி செய்துவிட்டார். அதனால் சிம்பு மீதான விவகாரத்தில் நான் சமாதானம் ஆக வாய்ப்பே இல்லை என்று கோபமாக மறுத்திருக்கிறார். எனினும் சிம்பு பிரச்னை குறித்து தொடர்ந்து ஐசரி கணேஷிடம் வெற்றிமாறனும் தாணுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.





