நடிகர் விஜய், அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்ட ஒன்றாக தான் இருக்கிறது. அவரது விஜய் மக்கள் இயக்கத்தை, அதன் மாநில நிர்வாகி புஸ்லி ஆனந்த் வலுப்படுத்தி வருகிறார். மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
விஜயை பொருத்த வரை, இளைஞர்கள் ஆதரவு நிறைய உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் விஜய் மீது மிகுந்த அபிமானம் இருக்கிறது. ஆனால் நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படுகிற அங்கீகாரமும், முக்கியத்துவமும் அவரது கட்சி சார்ந்தவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்குமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
ஏனெனில் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசனுக்கு மட்டுமே, மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்கிறது. அவரது கட்சி சார்ந்தவர்கள் குறித்த எந்த அக்கறையும் மக்கள் மத்தியில் இல்லை. அதனால், கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கமல் கட்சி பலத்த தோல்வியையே தழுவியது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும், பாஜக வானதி சீனிவாசனிடம் தோற்றுதான் போனார்.
அதேபோல், விஜய் நல்ல நடிகர். நல்ல மனிதர். பண்பாளர் என்ற மதிப்பீடுகளை தாண்டி ஒரு கட்சி தலைவராக அவர் எப்படி தலைமை எடுத்து, ரசிகர்களாகிய தொண்டர்களை வழிநடத்தி கட்சியை கொண்டு போகப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ரோகிணி தியேட்டரில் டிரெய்லர் பார்த்த ரசிகர்கள், தியேட்டரை துவம்சம் செய்த சம்பவம் மக்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதிலும் விஜய் கட்சி துவங்கி விஜயகாந்த் போல அதிக ஓட்டுகளை பெறுவாரா, அதிலும் குறிப்பாக திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய மலைகளாக இருக்கும் அந்த கட்சிகளை மீறி இவரால், அவர்களது ஓட்டு வங்கியில் கை வைத்து, வெற்றியை பறிக்க முடியுமா, என்பதெல்லாம் நிஜத்தில் அவர் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறனிடம், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய் மட்டுமல்ல, ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் யாராக இருந்தாலும் களத்தில் இறங்கி முதலில் வேலை செய்ய வேண்டும். அதன்பிறகு அரசியலுக்கு வந்தால், அவர்களது பணி சிறப்பாக இருக்கும், என்று தெரிவித்துள்ளார்.





