நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு படமும் வெளியாகவில்லை. இது அவரது ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளியது. மேலும் விடாமுயற்சி குட் பேட் அக்லி என 2 படங்களில் நடித்திருந்தும் அவரது படங்கள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் நீடிப்பது ஏகே ரசிகர்களை கடுமையான விரக்தியை தந்தது.
இந்த சூழலில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் என, கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்தில் டீசர் வௌியிட்டதால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் துணிவு பொங்கல் பண்டிகையின் போது வெளியானது.
அதே போல் 2 ஆண்டுகள் கழித்தும் அதே பொங்கல் பண்டிகை நேரத்தில் விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது என்று குஷியாக இருந்தனர். ஆனால் டிசம்பர் 31ம் தேதி இரவு அறிக்கை வெளியிட்ட லைகா நிறுவனம், விடாமுயற்சி ரிலீஸ் பொங்கலுக்கு இல்லை, படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து ரசிகர்களை பலத்த ஏமாற்றமடைய செய்தது.
இந்நிலையில் தற்போது அஜீத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமான லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விடாமுயற்சி படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு, படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் படத்தில் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் இருந்ததால், முகம் சுளித்த தணிக்கை குழுவினர் அதை நீக்கவும், மியூட் செய்யவும் படக்குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இந்த படம் 2 மணி நேரம் 30 நிமிடம் 46 விநாடிகள் நீளம் கொண்டது. அந்த வகையில் ரசிகர்கள் நீண்ட நேரம் படம் பார்க்கும் சிரமம் இருக்காது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் திரிஷா நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10ம் தேதி என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது விடாமுயற்சி படம் சென்சார் சென்று வந்த நிலையில் வருகிற ஜனவரி 23ம் தேதி அல்லது ஜனவரி 30ம் தேதி ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இன்னும் விடாமுயற்சி படம் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வராததால் ஏகே ரசிகர்கள் குழப்பத்தில்தான் உள்ளனர்.





