நடிகர் அஜீத்குமார் கடந்த 2022ம் ஆண்டில் நடித்து வெளியான படம் வலிமை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக போலீஸ் அதிகாரி வேடத்தில் மாஸ் ஆன நடிப்பை தந்திருந்தார் அஜீத்குமார். அந்த படத்தை தொடர்ந்து அஜீத்குமார் நடிப்பில் 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, பொங்கல் பண்டிகை நேரத்தில் துணிவு படம் வெளியானது.
வலிமை படத்தை இயக்கிய எச் வினோத் தான், துணிவு படத்தையும் இயக்கி இருந்தார். வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுத்திருந்த இந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜீத்குமார் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படமும், விஜய் நடித்த வாரிசு படமும் ஒன்றாக வெளியான நிலையில் 2 படங்களுமே வெற்றி படங்களாக இருந்தன.
இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், லியோ படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. அதன்பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில், தி கோட் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். அந்த படமும் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளிவர தயாராக இருக்கிறது. அதன்பிறகு விஜய், தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார்.
ஆனால் துணிவு படத்துக்கு பிறகு, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அஜீத்குமார் படம் எதுவும் வரவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த பிப்ரவரி முதல் ஜூன் வரை நிறுத்தி வைக்கப்பட்ட ஷூட்டிங், கடந்த ஒரு மாதமாக அஜர்பைஜானில் நடந்து இப்போதுதான் முடிந்திருக்கிறது.
இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் ஐதராபாத்தில் எடுக்கப்பட உள்ளது. இதில் முக்கிய சண்டைக்காட்சி எடுக்கப்பட்டு, அத்துடன் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்யப்படுகிறது. ஏறக்குறைய இந்த படம் துவங்கி, 11 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கொடுமை என்னவென்றால், பிரேக்டவுன் என 1997ம் ஆண்டில் வெளிவந்த படத்தையே அப்படியே காப்பியடித்துதான் இந்த படத்தை மகிழ்திருமேனி எடுத்துள்ளார். படத்தின் டைட்டிலேயே அதை அறிவிக்கவும் உள்ளனர். அதற்கான உரிமையும் பெறப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் எடுக்க வேண்டிய காட்சிகளை, இங்கேயே இந்தியாவில் எடுத்திருக்க முடியும். அஜர்பைஜான் வரை சென்று இத்தனை செலவுகள் தேவையும் இல்லை, இத்தனை தாமதம் அவசியமும் இல்லை என, விடாமுயற்சி படக்குழுவினரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அஜீத்குமாரை வைத்து காமெடி செஞ்சுட்டீங்களே என, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





