ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது. துணிவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் திரைப்படம் திரையரங்குகளில் வந்திருப்பதால், அதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கான முன்பதிவும் ஜெட் வேகத்தில் நடைபெற்றது. அஜித் ரசிகர்களைத் தாண்டி பலரும், விடாமுயற்சி படத்தை பார்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இப்படியான சூழலில் பிப்ரவரி ஆறாம் தேதியான நேற்று வெளியான அந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது என்றும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சரியாக வரவில்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர். இதற்கு ஏற்றபடி தான் கிளைமாக்ஸை மகிழ் திருமேனி எடுத்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
படத்தில் அர்ஜுன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அஜித் குமார். அவரது மனைவியாக கயல் என்னும் ரோலில் வருகிறார் திரிஷா. இருவருக்கும் இடையே திடீர் மனஸ்தாபம் ஏற்பட, த்ரிஷாவும் இன்னொருவர் மீது காதல் கொள்கிறார். இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறார்கள்.
கடைசியாக காரில் நெடுந்தூரப் பயணம் செல்லும் போது, அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் அடங்கிய கும்பலால் திட்டமிட்டு திரிஷா கடத்தப்படுகிறார். தன் மனைவியை தேடி ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் ஒற்றை ஆளாக போராடுகிறார் அஜித்குமார். இறுதியில் தனது மனைவியை காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் பாதியை சற்று விறுவிறுப்பாகவே எடுத்திருக்கிறார் மகிழ் திருமேனி. அதிலும் ஆரவ் வரும் காட்சிகள், அதன் பிறகு நடுரோட்டில் கார் ரிப்பேர் ஆகும் காட்சிகள், அங்கிருந்து திரிஷா கடத்தப்படும் காட்சி என ஒவ்வொன்றும் விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியிலும் அந்த கார் சண்டைக் காட்சி, நன்றாக இருப்பதாக பலரும் கூறியிருந்தார்கள்.
ஆனால் அதன் பிறகு கதை, வேறு எங்கோ ஒரு திசையில் பயணிப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இருப்பினும் இது படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முதல் நாளில் மட்டும் விடாமுயற்சி திரைப்படம் ஒட்டுமொத்தமாக 22 கோடி வசூல் செய்து இருக்கிறது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.





