வலிமை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். எச். வினோத் இயக்கத்தில் எடுக்கப்பட்ட வலிமை திரைப்படத்தில் அப்டேட் கேட்டு அலுத்து போனார்கள் அஜித் ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் வலிமை அப்டேட், செல்லும் இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட், கிரிக்கெட் மைதானத்திலும் வலிமையா அப்டேட்
என அஜித் ரசிகர்கள் அலப்பறை கொடுத்தாலும், அதற்கான தேதியை மெதுவாகத்தான் அறிவித்தது படக்குழு. இப்படி அஜித் ரசிகர்கள் கேட்டு கேட்டு கதறுவது, படக்குழுவினருக்கு பிடித்துப்போனதோ என்னவோ விடாமுயற்சி திரைப்படத்திற்கும் தயாரிப்பு நிறுவனம் இதைதான் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு அஜித் பிறந்த நாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி விடாமுயற்சி தொடர்பான அறிவிப்பு வெளியானது. அப்போது டைட்டில் உடன் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு லைக்கா நிறுவனம் எந்த ஒரு விவரத்தையும் வெளியிடவே இல்லை.
அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் சூட்டிங் தொடங்கப்பட்ட போதும், அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிய, அதில்தான் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பது தெரியவந்தது. இதேபோல் படத்திற்கு அனிருத் இசையமைப்பதும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறிய போதே ரசிகர்களுக்கு அறியவந்தது.
அஜர்பைஜான் நாட்டில் கிரைம் திரில்லர் ஸ்டோரியாக இதனை மகிழ் திருமேனி எடுத்து வருகிறார். அண்மையில் இதற்கான படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர். அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
தற்போது அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில் நேற்று, விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து முதல் போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இப்படியான சூழலில் படத்திற்கான சில விஷயங்களை மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியதாவது, இந்தக் கதைக்கு முக்கியமே நிலப்பரப்பு தான். அதற்காகத்தான் அஜர்பைஜான் நாட்டை தேர்வு செய்தோம். இந்தப் படத்தில் அஜித், த்ரிஷா இருவரும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பில், ஒரு நாளில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே சூட்டிங் நடைபெற்றது. ஆனால் இப்போது 14 முதல் 15 மணி நேரம் படபிடிப்பு நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் இரண்டாவது வாரம் இதன் படப்பிடிப்பு முடிவடையும். அதன் பிறகு பேச்ட் ஒர்க் பணிகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெறும் என்று தெரிவித்தார்.





