சிறுத்தை விஸ்வாசம் வீரம் வேதாளம் விவேகம் அண்ணாத்தே கங்குவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இவரது தம்பி நடிகர் பாலா. தமிழில் அன்பு அப்பா அம்மா செல்லம் வீரம் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் பாலா நடித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை பாலா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். பாலாவின் முதல் மனைவி அவரை பற்றி சில புகார்களை கூறிய நிலையில் அதுகுறித்த வழக்குகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் பாலா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மலையாளத்தில் உணர்ச்சிக்கரமாக பேசியிருக்கும் பாலா கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகளாக எனது வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள் மன அழுத்தங்கள் மற்றும் வழக்குகளால் ஏற்பட்ட பாதிப்புகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
நான் படித்த காலத்தில் இருந்த வாழ்க்கை வேறு. இப்போது நான் வாழ்கிற வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். திருமணம் ஆனதிலிருந்து பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்துக் கொண்டு வாழ்ந்தேன். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதை உள்ளுக்குள் வைத்துக் கொண்டுதான் இருந்தேன். சில உண்மைகளை சொல்லவே முடியவில்லை. காரணம் நான் தான். சிலரை காப்பாற்றுவதற்காகவே பல விஷயங்களை வெளியே பேசவில்லை. மீடியாவில் நல்ல விஷயங்களும் வருகிறது.
நல்ல செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் வெறும் வியூஸ்க்காகவே சில பொய்யான விஷயங்களை பெரிதாக்குகிறார்கள். கடந்து சில ஆண்டுகளாக என்னை சுற்றி தொடர்ச்சியாக வந்த கேஸ் பிரச்சனைகள் சர்ச்சுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இங்கே சட்டம் இருக்கிறதா, இந்த உலகத்திலேயே சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகம் வருகிறது. அப்படி என்றால் நான் என்ன செய்ய வேண்டும். இனி யாராவது என்னைப் பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.
அனைத்து பத்திரிகைகளையும் அழைத்து பிரஸ்மீட் நடத்தி எல்லா உண்மைகளையும் வெளியில் சொல்லிவிடுவேன். இது நிச்சயம் நடக்கும். பலரும் என்னை அழைத்து பேசுகிறார்கள். உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு நீங்கள் பின்வாங்க முடியாது. இந்த உண்மைகள் வெளிவரக்கூடாது என்றால் விஷம் வைத்து என்னையும் என் மனைவியையும் கொன்று விடுங்கள் என்று நடிகர் பாலா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





