தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேற்று மாலை வீடியோ ஒன்றை அவரே பேசி வெளியிட்டு இருந்தார். கரூரில் அவர் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த நிலையில் 3 நாட்கள் கழித்து விஜய் இந்த வீடியோவை பதிவை செய்திருந்தார். இது வெளியான சில நிமிடங்களில் இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் காணப்பட்ட நடிகர் விஜய், தாடி மீசை எல்லாம் ட்ரிம் செய்த நிலையில் புதிய ஹேர்ஸ்டைலில் மிகவும் பொலிவாக காணப்பட்டார். ஆனால் 3 நாட்களாக அவர் மிகவும் தாங்க முடியாத வலியில் இருப்பதாக வீடியோவில் குறிப்பிட்டு பேசி இருந்தார். ஆனால் வீடியோவில் அவரது தோற்றம் அப்படி இல்லை என்று வீடியோ பார்த்த பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் கரூரில் நடந்த சம்பவத்துக்கு முழுக்க முழுக்க திமுக மட்டுமே காரணம் என்பது போலவும், சிஎம் சார் என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்க, என் கட்சியினர் மீது கைவைக்க வேண்டாம். நான் வீட்டில் அல்லது ஆபிஸில்தான் இருப்பேன் என்றும் அந்த வீடியோ பதிவில் விஜய் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்ட விஜய், கரூருக்கு 5 மணி நேரம் தாமதமாக இரவு நேரத்தில் வந்தது குறித்தும் கூட்டம் பலமடங்கு அதிகரித்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தவெக நிர்வாகிகள் தரப்பில் அக்கறையான நடவடிக்கை எடுக்க மறந்து விட்டது குறித்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தனது தரப்பிலும் தவெக தரப்பிலும் இருந்த குறைகள் பற்றி விஜய் வீடியோவில் பேசாததும் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
எங்க தரப்புல எந்த தப்புமே நாங்க செய்யலே, போலீஸ் பர்மிஷன் கொடுத்த இடத்துல நின்று நாங்க பேசிவிட்டு வந்தோம் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கும் நடிகர் விஜய், தன்னை காண்பதற்காக பல மணி நேரமாக உணவு, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் கால்கடுக்க கூட்ட நெரிசலில் காத்து கிடக்கும் மக்களை காண பல மணி நேரம் தாமதமாக வந்தது தன் தவறுதான் என்பதை உணர்ந்ததாக தெரியவே இல்லை என்கிற கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.
திமுக தான் ஒட்டுமொத்த காரணம் என்று மறைமுகமாக கூறிய தளபதி விஜய், மக்களின் பாதுகாப்பு மட்டுமே எங்களுக்கு பிரதான நோக்கமாக இருந்தது என்று இந்த வீடியோவில் கூறியிருக்கிறார். போலீஸ் அனுமதித்த இடம் குறுகலானது, மக்களுக்கு பாதுகாப்பற்றது என்பதால் அந்த கூட்டத்தையே ரத்து செய்திருக்கலாம். போலீஸ் கேட்ட இடத்தில் அனுமதி தரவில்லை என்பதால் கரூர் கூட்டம் நடக்கவில்லை என்று தவெக அறிவித்து இருந்தால் இத்தனை உயிர்களை இழந்திருக்க மாட்டோம் என்றும் ஒரு தரப்பினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.





