தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் வாலி திரைப்படத்தின் போது, உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அந்த சமயம் அஜித் இடம் அவர் தீனா படத்தின் கதையை கூற, அதற்கும் நடிகர் சம்மதம் தெரிவித்ததால் படம் உருவானது. சென்னையை மையப்படுத்தி இதன் கதைக்களம் அமைந்தது.
முதல் திரைப்படமே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதால், அடுத்தடுத்து தனது பயணங்களில் சிகரம் தொட்டார் ஏ ஆர் முருகதாஸ். ரமணா திரைப்படம் ஏ ஆர் முருகதாஸ்க்கு மட்டும் அல்லாமல், விஜயகாந்திற்கும் ஒரு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. தொடர்ந்து கஜினி, ஏழாம் அறிவு ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கினார்.
இடையே பாலிவுட் உலகிற்கும் சென்று வந்த ஏ ஆர் முருகதாஸ், தொடர் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த விஜய்க்கு துப்பாக்கி என்னும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து அவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கத்தியும் விஜய் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனிடையே சமீப காலமாக, ஏ ஆர் முருகதாஸுக்கு எந்த ஒரு படமும் கை கொடுக்கவில்லை.
சர்க்கார், ஸ்பைடர், தர்பார் என தொடர் தோல்வி படங்களை அவர் கொடுத்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் விஜயுடன் இணைவதாக இருந்தது ஆனால் கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டது. பிறகு சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்தார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தீனா திரைப்படத்திற்கு பிறகு அவர் சென்னையை கதைக்களமாக கொண்டு படம் எடுத்து வருகிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் இதனை தயாரிக்கிறது. இந்த நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. துப்பாக்கி திரைப்படத்தின் மிரட்டிய வித்யூத் ஜமால் தான் இந்த படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வீடியோ வெளியாக ரசிகர்கள் அதற்கு லைக்ஸ் அளித்து வருகின்றனர்.





