தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். அவர் தனுஷ் நடிப்பில் பொல்லாதவன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஆடுகளம், அசுரன், விசாரணை, வட சென்னை, விடுதலை போன்ற வெற்றிப் படங்களை தந்தார்.
கடந்த ஆண்டில் மார்ச் மாத இறுதியில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் 20 மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இயக்குனர் வெற்றிமாறன், நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சூரி இளையராஜா குறித்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தி பேசினார்.
விழாவில் நடிகர் சூரி பேசியதாவது, இந்த விழாவில் மட்டுமல்ல கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா, திருமண விழா என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும்தான் நாயகனாக இருந்து வருகிறார். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஏறாத இடமில்லை பார்க்காத வேலை இல்லை.
அந்த வேலைகளை பார்த்துவிட்டு வந்து கை கால் வலியுடன் வந்து படுத்தால் எதிர் வீட்டு ஜன்னலில் லேசாக இளையராஜா பாடல் கேட்கும், அந்த வீட்டு கதவை தட்டி கொஞ்சம் கதவை திறந்து விடுங்கள் என்று சொன்னால் அவருடைய பாடல் தென்றல் போல வந்து நம்மை தட்டி எழுப்பும். ஒரு தாயைப் போல இருந்து அவருடைய பாடல்கள் நம்மை ஆறுதல் படுத்தும்.
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு ஆப்ஷன் இருக்கும். ஆனால் ஆப்ஷன் எதுவும் இல்லாத ஒரே ஆப்ஷன் இளையராஜா மட்டும்தான். அவருக்கு மாற்று என்பதே கிடையாது. அவருடைய அலுவலகத்தில் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அவர் வாயால் சொல்லி கேட்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. நான் மட்டுமல்லாமல் என் சந்ததிகள் கூட போற்றி பாதுகாக்க வேண்டிய பெருமை இது என்று சூரி பேசியிருக்கிறார்.





