தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்ற போற்றதலுக்குரிய படைப்பாளியாக இருப்பவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை யதார்த்த சினிமாவாக மாற்றிக் காட்டிய முன்னோடி. முரட்டுக்காளை சகலகலா வல்லவன் என மசாலா படங்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த காலத்தில் 16 வயதினிலே அலைகள் ஓய்வதில்லை கடலோர கவிதைகள் படங்களை தந்து ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தி மடைமாற்றியவர்.
கடந்த வாரத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ்குமார் திடீரென மாரடைப்பால் காலமானார். 48 வயதில் அவரது இறப்பு தமிழ் சினிமா துறையினரையும் ரசிகர்களையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் தள்ளியது. ஏற்கனவே இருதய ஆபரேசன் செய்த நிலையில் இருந்த அவர் திடீரென மறைந்தது சொல்ல முடியாத சோகமாக அமைந்தது.
இதையடுத்து மனோஜ்குமாரின் உடல் சேத்துப்பட்டில் இருந்த அவரது வீட்டில் வைக்கப்பட்டு பிறகு நீலாங்கரையில் உள்ள இயக்குனர் பாரதிராஜா வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. முதல்வர் துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் என பலரும் அங்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் தகவல் கேள்விப்பட்டதும் வீடியோ வெளியிட்டு ஆறுதல் சொன்ன இசைஞானி இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்த வரவே இல்லை. அதே போல் தனது வலைதள பக்கத்தில் ஆறுதல் சொன்ன நடிகர் கமல்ஹாசனும் நேரில் வரவில்லை. 16 வயதினிலே படத்தில் பரட்டையன் என்ற கேரக்டரில் ரஜினிக்கு அடையாளம் தந்தவரே பாரதிராஜா என்ற நிலையில் ரஜினியும் நேரில் வரவில்லை.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இப்போது வெளிநாட்டில் இருப்பதால் அவரால் மனோஜ்குமார் மறைவுக்கு நேரில் வர முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக துக்க நிகழ்வுகளுக்கு நேரில் செல்வதில்லை என நடிகர் கமல் முடிவு செய்திருப்பதால் அவரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கே நேரில் வராத நடிகர் அஜீத்குமார் பாரதிராஜா மகன் மனோஜ் மறைவுக்கும் நேரில் வரவில்லை. ஆனால் சிலர் அவர் வந்தது போன்ற புகைப்படங்களை, வீடியோவை பழைய ஆல்பத்தில் இருந்து எடுத்து வெளியிட்டு வருகின்றனர். தவிர அஜீத்குமார் இப்போது வெளிநாட்டில் கார் ரேஸில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





