இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 20ம் தேதி வெளியான படம் விடுதலை 2. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பாகம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 2ம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வந்தது. ஆனால் 20 மாதங்கள் தாமதமாக தான் விடுதலை 2 படம் வெளியானது.
முதல் பாகத்தில் நடிகர் சூரியை காமெடி நடிப்பில் இருந்து ஹீரோவாக காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் தந்து இயக்கி உள்ளார். முதல் படத்தில் கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்தது போல், 2ம் பாகத்தில் சூரி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
விடுதலை 2 படம் முழுவதும் கம்யூனிசம் பேசும் கதைக்களமாக இருப்பதாகவும், போராட்டத்தை மையப்படுத்திய பல காட்சிகள் இருப்பதாகவும் எதிர்மறை விமர்சனங்கள் ஒரு தரப்பில் எழுந்துள்ளன. நக்சல் தீவிரவாதத்தை பெருமைப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளியான பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் வடசென்னை விசாரணை விடுதலை என 6 படங்களுமே வெற்றிப் படங்களாக இருந்த நிலையில், இப்போது வெளியான விடுதலை 2 படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வெற்றிப் படமாக மாறியுள்ளது.
விடுதலை படத்தின் 2ம் பாகத்தை தொடர்ந்து 3ம் பாகம் வெளியாக வாய்ப்பில்லை என்று வெற்றிமாறன் ஏற்கனவே கூறிவிட்டார். எனினும் விடுதலை 2ம் பாகம் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது அந்த படத்தில் ஒரு மணி நேர கூடுதல் காட்சிகள் இடம்பெறும் என்பதையும் கூறியிருக்கிறார். அதனால் ஓடிடியிலும் விடுதலை 2 அதிக கவனத்தை பெற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் விடுதலை 2 படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 29 கோடி ரூபாய்க்கு வசூலித்துள்ளதாகவும், உலகளவில் மொத்தம் 42 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதனால் நிச்சயமாக 100 கோடி ரூபாய் வசூல் பாக்ஸ் ஆபஸில் விடுதலை 2 படம் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





