தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட இயக்குனராகவும், தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்ட நபராகவும் திகழ்ந்து வருகிறார் வெற்றிமாறன். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்ததால் அவரது படத்திற்கு என ஒரு எதிர்பார்ப்பு எப்போதும் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த அவர், முதல்முறையாக பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அது ஒரு கனாக்காலம் என்னும் பாலுமகேந்திராவின் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். அதில் உதவியாளராக வெற்றிமாறன் பணி புரியும் போது தான் பொல்லாதவன் கதையை தனுஷிடம் கூறி ஓகே வாங்கி இருக்கிறார். இப்படியாக இந்த திரைப்படம் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பிறகு தனுசுடன் இணைந்து ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய வெற்றி திரைப்படங்களை வெற்றிமாறன் கொடுத்தார். இதே போல் விசாரணை திரைப்படத்தை எடுத்தும் அவர் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த திரைப்படம் தான் விடுதலை.
மிகவும் குறைந்த பட்ஜெட்டிலேயே இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்ட வெற்றிமாறன், அதற்கான பணிகளை மேற்கொண்டார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் படத்தின் மீது மிகுந்த ஈடுபாடு காட்ட ஆரம்பித்து இரண்டு பாகமாக எடுக்க முடிவெடுத்தார். இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் அவர் நீண்ட நாட்களாக எடுத்து வந்தார்.
இதில் மஞ்சு வாரியர், கிஷோர் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்தனர். டிசம்பர் 20ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடைசி நாட்கள் வரை அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார் வெற்றிமாறன். தொடர்ந்து சூட்டிங் சென்று கொண்டே இருந்ததால் படத்தின் பட்ஜெட் எகிறியாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் வரை இந்த திரைப்படத்திற்கு செலவானதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. முதல்முறையாக வெற்றிமாறன் திரைப்படம் இப்படி ஒரு சறுக்கலை சந்தித்திருக்கும் சூழலில், இதனால் பெரிய வசூலும் இல்லை என்று கூறுகிறார்கள். இரண்டாம் பாகத்திற்காக மட்டும் வெற்றிமாறனுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்ட சூழலில், தயாரிப்பு நிறுவனத்திற்கு 40 கோடி ரூபாய் நஷ்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





