விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆன நிலையில் “லியோ” திரைப்படமும் வேற லெவலில் ஹிட் ஆகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து வருகிறார்.
“லியோ” திரைப்படம் குறித்து பல தகவல்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இத்திரைப்படத்தில் மடோன்னா செபஸ்டியன் புதிதாக இணைந்திருக்கிறார் எனவும் அவர் விஜய்க்கு தங்கையாக நடித்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2000 டான்சர்களை கொண்ட ஒரு பிரம்மாண்டமான பாடலை படக்குழுவினர் படமாக்கினார்கள் என்றும் ஒரு தகவலும் வெளிவந்தது.

அதே போல் வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் “அல்டர் ஈகோ நான் ரெடி” என்ற பாடல் முதல் சிங்கிள் பாடலாக வெளிவரவுள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் பலரும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், “லியோ” திரைப்படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரத்தை குறித்த ஒரு மாஸ் தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது “லியோ” திரைப்படத்தில் விஜய் Split Personality (அந்நியன் படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் போல) நடிக்கிறார் என்று தகவல் வருவதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே பார்த்திபன், லியோ என இரண்டு பெயர்களில் விஜய் நடித்து வருகிறார் என்று கூறப்படும் நிலையில் தற்போது அந்தணன், Split Personality என்ற மனநோயால் விஜய் பாதிக்கப்பட்டது போல் வருகிறார் என்று கூறிய தகவல் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.





