நடிகர் விஜய் நடிப்பில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தின் படப்பிடிப்பு மிக மிக வேகமாக நடந்து வருகிறது. வரும் மார்ச் 31ம் தேதியுடன் படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்க திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கப்படுகிறது. ஆனால் அது சில மாதங்களுக்கு மேல் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
கோட் படத்தில் நடித்த விஜய், பிரசாந்த் ஆகியோருக்கு மட்டும்தான் டீ ஏஜிங் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் படத்தில் நடித்த பல பேருக்கு டீ ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. அதனால் போஸ்ட் புரடக்சன் பணியின் போது டீ ஏஜிங் மற்றும் விஎப்எக்ஸ் சார்ந்த பணிகளே வெகு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த டீ ஏஜிங், விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல் செல்லும் படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு அங்கு சில தினங்கள் முகாமிட்டு, இந்த பணிகளை எல்லாம் மேற்பார்வையிட்டு செய்து வர திட்டமிட்டு இருக்கிறார். எந்த விஷயத்திலும் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், தானே நின்று அந்த பணிகளை கவனிக்கவும் முடிவு செய்துள்ளார்.
அத்துடன் இந்த படத்தில், ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் நடித்திருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அதை படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை. எனவே கேப்டன் சம்பந்தப்பட்ட காட்சிகளை சரியாக வடிவமைக்கவும் வெங்கட்பிரபு லாஸ் ஏஞ்சல் செல்லலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையே கோட் படத்தின் முக்கிய காட்சிகள், கிளைமேக்ஸ் போன்றவற்றை இலங்கையில் நடத்திக்கொள்ளலாம் என துவக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டு, படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு போன்றோர், இலங்கை சென்று வந்தனர். அங்கு கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை சந்தித்தும் படப்பிடிப்பு ஏற்பாடுகள் சார்ந்த சில விஷயங்களை பேசிவிட்டு வந்தனர்.
ஆனால் விஜய் அங்கு சென்றால், முன்னாள் அதிபர் ராஜபக்ஷே குடும்பத்தினர் நடிகர் விஜயை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த பிரச்னையை வைத்து இலங்கையில் பெரிய அரசியல் ஆட்டமே ஆடவே சிலர் திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து, நடிகர் விஜய், இலங்கையில் ஷூட்டிங் வேண்டாம், கேன்சல் பண்ணிடுங்க என்று உறுதியாக சொல்லியிருக்கிறார். அதன்பிறகு இப்போது வேறு இடங்கள் குறித்து படக்குழு பேசி வருகின்றனர்.





