சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் அண்மையில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் கூடுமானவரை வரவேற்பு கொடுத்ததால், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்தது. ஒட்டுமொத்தமாக அந்த திரைப்படம் 104 கோடி ரூபாய் வசூல் பார்த்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே தெரிவித்தது.
பூஜா ஹெக்டேவுக்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதே போல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் தனது பங்களிப்பை சரியாக அளித்திருந்தார். ஒட்டுமொத்தமாக படத்தை தனது தோளில் சுமந்து தாங்கிய சூர்யா, அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அண்மையில் இந்த திரைப்படத்திற்கான வெற்றி விழாவும் நடைபெற்றது. அதில் படத்தின் லாபத்தில் இருந்து 10 சதவீதத்தை, அகரம் நிறுவனத்திற்கு வழங்கினார் சூர்யா. இப்படி இருக்க தற்போது அவர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ்பெற்ற சுவாசிகாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தை கதைக்களமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்திலேயே எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யாவும், திரிஷாவும் வருகிறார்கள். இருப்பினும் இந்த திரைப்படம் ஆன்மீகம் கலந்த பேண்டஸி கதைகளத்தில் உருவாவதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு வேட்டை கருப்பு என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அனேகமாக தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தனுசை வைத்து சார் மற்றும் துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை எடுத்திருந்தார். இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குவதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்து உள்ளது. அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரெட்ரோ திரைப்படத்தின் நிகழ்ச்சியின் போது, சூர்யாவுடன் விஜய தேவரகொண்டாவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.





