நடிகர் தனுஷ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் காலா. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய காலா படம், கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் ஈஸ்வரி ராவ், மணிகண்டன், சமுத்திரக்கனி, நானே படேகர், ஹூமா குரேஷி, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற வெற்றிப் படமாக இருந்தது.
சவூதி அரேபியாவில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமை காலா படத்துக்கு உண்டு. மும்பையில் தாராவியில் வாழும் மக்களின் நில உரிமை போராட்டம் குறித்த கதையை இது மையமாக கொண்ட படம். காலா என்கிற கரிகாலன் கேரக்டரில் ரஜினி, நடிப்பில் வேறு வடிவம் காட்டியிருந்தார்.
நடிகர் தனுஷ், இந்த படத்தை ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாரித்த நிலையில், ரூ. 211 கோடி வரை வசூலித்து, லாபகரமான படமாக காலா, அமைந்தது. கபாலி படத்தை தொடர்ந்து, 2வதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் மீண்டும் நடித்திருந்தார் ரஜினிகாந்த். சந்தோஷ் நாராயணன் இசையில் கண்ணம்மா, வாடி என் தங்கச்சிலை போன்ற பாடல்கள் ரசிக்க வைத்தன.
தாராவியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, அங்கு வாழும் மக்களுக்கான நன்மைகளை செய்து வருகிறார் காலா என்கிற கரிகாலன். ஆனால் அந்த தாராவியை பறிப்பதற்காக அரசியல்வாதியான ஹரிதாதா, ரஜினியின் மனைவி, மகனை கொன்றுவிடுகிறார். ஒரு கட்டத்தில் எங்கள் நிலம், எங்கள் உரிமை என்ற போராட்டத்தில் ரஜினி, மக்களுடன் களம் இறங்கி போராடி, இறுதியில் உயிர் நீப்பதுதான் காலா படத்தின் கதை.
வழக்கமாக தனது படங்களில், மக்கள் உரிமைகளை பேசும் இயக்குனர் பா ரஞ்சித் இந்த படத்திலும் அதையே செய்திருக்கிறார் என்றாலும், காலா படம் ரஜினியால் வித்யாசப்பட்டு, ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இருந்தது. பா ரஞ்சித் இயக்கிய படமாக இருந்தாலும், அதையும் கடந்து ரஜினி படமாகவும் பல இடங்களில் அது ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட்டின் மாத இதழ் சைட் அண்ட் சவுண்ட் இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களை தேர்வு செய்துள்ளது. அந்த பட்டியலில் ஒன்றாக ரஜினி நடித்த காலா படத்தை தேர்வு செய்துள்ளது. ஓல்டு பாய், ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் தமிழ் படமாக காலா படம் மட்டுமே தேர்வாகி உள்ளது, ரஜினி ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது.





