தம்பி, பசும்பொன், வீரநடை, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட படங்களை இயக்கி, இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சீமான். பிறகு எவனோ ஒருவன், மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம், சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்து நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். துவக்கத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சீமான்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆதரவாளராக தன்னை கூறிக்கொளளும்இயக்குனர் சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சி கடந்த 2010ம் ஆண்டு, மே 18ம் தேதி துவங்கப்பட்டது. இதுவரை 2011, 2016, 2021 என்ற மூன்று சட்டசபை தேர்தல்களை, 2014, 2019, 2024 ஆகிய மூன்று நாடாளுமன்ற தேர்தல்களை நாம் தமிழர் கட்சி கடந்து வந்துள்ளது.
இதுவரை சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை தனித்து சந்தித்து மக்களின் ஆதரவு ஓட்டுகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி இன்னும் ஒருமுறை கூட எம்பி அல்லது எம்எல்ஏ என பதவிகளை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை பெற்று, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி இருக்கிறார். வரும் 2026ம் ஆண்டில் நான்தான் முதல்வர் என்ற லட்சியத்தில் அவர் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஜய் அரசியல் வருகை குறித்து ஒருமுறை பேசிய சீமான், எங்களது கட்சியில் தம்பி விஜய் இணைந்தால் வரவேற்போம். அதே நேரத்தில் வெற்றி, தோல்வி எது வந்தாலும் அரசியல் களத்தில் அதே ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன் கடைசி வரை மக்களுக்காக போராட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நாம் தமிழர் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் 14 ஆண்டுகளாக போராடி வருகிறார். அதனால் அவர் கட்சி ஜெயித்தால், அவர்தான் தமிழகத்தின் முதல்வராக இருப்பார். அதே வேளையில் விஜய் கட்சி அவருடன் கூட்டணி வைத்தால், வெற்றி பெற்றால் விஜய்தான் தமிழகத்தின் முதல்வராக இருக்க விரும்புவார். ஆக, முதல்வர் நாற்காலியை விஜய் சீமானுக்கோ, சீமான் விஜய்க்கோ விட்டுத்தர மாட்டார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
அரசியலில் என்னுடைய பாணி வேறு, விஜயுடன் கூட்டணி சேர்த்து பயணிக்க முடியாது என துவக்கத்தில் கூறிய சீமான், சமீபத்தில் அண்ணனும், தம்பியும் ஒன்று சேரக்கூடாதா என்று எதிர்கேள்வி எழுப்பியிருந்தார். அதனால் சட்டசபை தேர்தலில் விஜயுடன் இணையும் முடிவுக்கு சீமான் வந்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்த நிலையில், இப்போது நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கு விஜய் வாழ்த்துகள், பாராட்டுகள் தெரிவித்துள்ளார். அதனால் விஜய், சீமான் சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிட வாய்ப்பு உருவாகி இருப்பதாக, சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் துவங்கி விட்டது.





