ஒரு சிறிய பட்ஜெட் படமாக ஆரம்பித்து அதுவே ஆலமரம் போல விரிந்தது தான் விடுதலை திரைப்படத்திற்கு பின்னணியில் இருக்கும் கதை. அசுரன் திரைப்படத்தை முடித்துவிட்டு, விடுதலை திரைப்படத்தை எடுக்க ஆயத்தமானார் வெற்றிமாறன். ஆனால் அதை மிகக் குறுகிய காலத்தில் எடுக்க அவர் திட்டமிட்டு இருந்தார்.
50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அதை எடுத்து முடித்துவிட்டு அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தில் கவனம் செலுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் சூட்டிங்கின் போது இவை அனைத்தும் தலைகீழாக மாறியது. முதலில் இந்த திரைப்படத்தில் சூரி உடன் அவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அடர்ந்த வனப் பகுதிகளில் பாரதிராஜாவால் நடிக்க முடியாது என்பதால், இயக்குனரின் அடுத்த ஆப்ஷன் விஜய் சேதுபதி பக்கம் திரும்பியது. வெறும் நான்கு நாட்கள் தான் விஜய் சேதுபதியிடம் அவர் கால்சீட் கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பிடம் படப்பிடிப்பு செல்ல செல்ல, விடுதலை திரைப்படம் வளர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் இந்த திரைப்படத்தை முதல் மற்றும் இரண்டாம் பாகமாக எடுக்கத் திட்டமிட்டார் வெற்றிமாறன். முதல் பாகத்தில் சூரியை மையப்படுத்திய கதைக்களம் நகர அதற்கு பின்னணியில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் சேதுபதியையும் அவ்வப்போது காட்டினார் வெற்றிமாறன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதன்பிறகு இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பரிலேயே வெளியாகும் என்று கூறினார்கள். ஆனால் அதுவோ இழுத்தடிக்கப்பட்டு, ஓராண்டை கடந்து விட்டது. அதோ இதோ என்று வரும் இருபதாம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் மஞ்சு வாரியர் இணைந்திருக்கிறார்.
கருணாஸ் மகன் கென், கிஷோர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கும் விஜய் சேதுபதி, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். கருப்பன் கதாபாத்திரத்தில் கென் வருகிறார். அவர் பின்னணியில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கும். மகாலட்சுமி ரோலில் வரும் மஞ்சுவாரியருக்கு பின்னணியிலும் ஒரு கதை இருக்கும். படத்திலிருந்து நிறைய ஃபுட்டேச்சுகளை வெற்றிமாறன் வைத்திருக்கிறார். இதை வைத்து அவர் விடுதலை படத்தின் மூன்றாம் பாகத்தை கூட வெளியிடலாம் என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.





