தமிழ் சினிமாவில் தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை வென்றவர் என்ற பெருமையை பெற்றவர் இயக்குனர் பாண்டியராஜ். 2010 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் இயக்குனர் இவர்தான். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வித்தியாசமான களத்தில் தனது முதல் திரைப்படத்தை எடுத்து பலரது பாராட்டையும் பெற்றார் பாண்டியராஜ்.
சிறுவர்களின் மனநிலையையும், அதற்குள் இருக்கும் நகைச்சுவை குடும்ப உறவு என அத்தனையும் வெளிச்சம் போட்டு காட்டியதால், இந்த திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அடுத்ததாக அவர் வம்சம் திரைப்படத்தை இயக்கினார். கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
தனது முதல் இரண்டு திரைப்படங்களை தாண்டி மூன்றாவது திரைப்படத்தை வித்தியாசமான முறையில் எடுத்தார் பாண்டியராஜ். சிவகார்த்திகேயனுக்கு முக்கிய ரோலை கொடுத்து அவர் இயக்கிய மெரினா திரைப்படம் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு நல்ல பிளாட்பார்ம் ஆக அந்த திரைப்படம் அமைந்தது.
இதன் பிறகு நகைச்சுவையை மையமாக வைத்து அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தை இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும், ரசிகர்களால் பேசப்பட்டது. இப்படி படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் பாண்டியராஜுக்கு, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி என அடுத்தடுத்து தோல்வி திரைப்படங்கள் அமைந்தன.
பாண்டியராஜ் தனது பார்மை இழந்து விட்டார் என்று பலரும் கூறிய நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார் இயக்குனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தரமான வெற்றியை பாண்டிராஜ் கொடுத்தார். ஐந்து அக்கா ஒரு தம்பி என பாசப் போராட்டம் மிகுந்த இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை பாண்டியராஜ் இயக்கினார். இந்த நிலையில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, பாண்டியராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது மிஷ்கினின் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு அவர், பாண்டியராஜுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





