சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் யாருடைய சிபாரிசும் இல்லாமல் சுயம்புவாக வாய்ப்பு பிடித்து முன்னுக்கு வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் சில படங்களில் தலையை காட்டியவர், தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த விஜய் சேதுபதி நாயகன் வில்லன் குணச்சித்திரம் என எல்லாவிதமான கேரக்டர்களிலும் அசத்தக் கூடிய ஒரு திரைக்கலைஞராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்தாண்டில் வெளியான அவரது 50வது படம் மகாராஜா மாபெரும் வெற்றியை பெற்றது. சீனாவிலும் 90 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
சினிமாவில் நடிகராக அசத்திய விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக மாறி படங்களை தயாரிக்கவும் செய்தார். கடைசி விவசாயி ஆரஞ்சு மிட்டாய் போன்ற சின்ன பட்ஜெட் படங்களை, ஆனால் மக்கள் பார்க்க வேண்டிய நல்ல கதைகளை தயாரிக்க அவர் முன்வந்தார். இது ரஜினி விஜய் அஜீத்குமார் போன்ற பெரிய நடிகர்கள் முன்வராத ஒரு சிறந்த செயலாக உள்ளது.
இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் விஜய் டிவியை பெருமைப்படுத்தி விட்டார். இனி அடுத்த சீசனிலும் விஜய் சேதுபதியே தொகுப்பாளர் என்று அறிவித்து விட்டனர். இப்படி அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லும் விஜய் சேதுபதி இப்போது புது அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார்.
காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக 2 ஆண்டுகளாக திட்டமிட்டு வந்தனர். 10 நாட்கள் தேனியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் இப்போது அந்த வெப் சீரிஸில் இருந்து மணிகண்டன் வெளியேறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த வெப் சீரிஸை நடிகர் விஜய் சேதுபதியே இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதியும் அவரது நண்பர் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் என்பவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை தயாரிக்க உள்ளதாகவும், அதே நேரத்தில் அந்த வெப் சீரிஸை விஜய் சேதுபதி இயக்கி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் முறைப்படி விஜய் சேதுபதி கர்நாடக இசையும் கற்று வருகிறார். இப்படி அடுத்த டி ராஜேந்தராக மாறி விடுவாரோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





